வெள்ளம், நிலச்சரிவால் இந்தியா நேபாளத்தில் 200 பேர் வரை பலி

இந்தியாவிலும் நேபாளத்திலும் பெய்துவரும் கனத்த மழையால் ஏற்பட்டுள்ள வெள்ளத்திலும் நிலச்சரிவுகளிலும் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 200ஐ நெருங்கியுள்ளது.

கேரள மாநிலத்தில் கடந்த வெள்ளிக்கிழமையிலிருந்து கனத்த மழை பெய்துவருகிறது. அதில் குறைந்தது 42 பேர் உயிரிழந்துள்ளனர். உத்தர்காண்ட் மாநிலத்தில் குறைந்தது 55 பேர் உயிரிழந்து, 11 பேரைக் காணவில்லை. இதில் பாரிய நிலச்சரிவில் வீடு ஒன்று புதையுண்டதில் ஒரே குடும்பத்தின் ஐந்து பேர் பலியாகினர்.

மேற்கு வங்காளத்தில் ஐவர் உயிரிழந்துள்ளனர். ஒரே குடும்பத்தின் எட்டு மற்றும் பத்து வயதுடைய இரு சிறுமிகள் மழை நீரில் அடித்துச் செல்லப்பட்டுள்ளனர். கனத்த மழையால் ஏற்பட்ட நிலச்சரிவுகளில் வீடுகள் மூழ்கின.

இதற்கிடையே நேபாளத்தில், திடீர் வெள்ளத்தில் சிக்கி குறைந்தது 88 பேர் பலியாகியுள்ளனர். மண் மற்றும் குப்பைகளுடன் ஏற்பட்ட திடீர் பனிச்சரிவினால் வீடு ஒன்று புதையுண்டதில் மூன்று சிறுவர்கள் உட்பட ஒரே குடும்பத்தில் ஆறு பேர் உயிரிழந்ததும் இதில் அடங்கும். தொடர்ந்து பெய்துவரும் கடும் மழையால் வெள்ளத்தில் மூழ்கியுள்ள கிராமங்களுக்குச் செல்வதற்கான முயற்சிகள் தோல்வியில் முடிந்துள்ளன.

வெள்ளத்தில் உயிரிழந்த ஒவ்வொருவரின் குடும்பத்துக்கும் 1700 டொலர் நிவாரண நிதி வழங்கப்படும் என்றும் காயமுற்றோருக்கு இலவச சிகிச்சை அளிக்கப்படும் என்றும் நேபாள அரசாங்கம் தெரிவித்தது.

அடுத்த சில நாட்களில் மழை தொடரும் என்று எதிர்வுகூறப்பட்டுள்ளது.

பருவநிலை மாற்றம், அளவுக்கு அதிகமான மேம்பாட்டுப் பணிகள் காரணமாக தெற்காசியாவில் அண்மைய ஆண்டுகளாக மோசமான வானிலை நிலவுவதாக நிபுணர்கள் தெரிவித்தனர். 

Fri, 10/22/2021 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை