ஆபிரிக்கா: முழுமையான தடுப்பூசி பெற்றோர் 2 வீதத்திற்கும் குறைவு

ஆபிரிக்கக் கண்டத்தில் பாதி அளவான நாடுகளில் இரண்டு வீதம் அல்லது அதற்கும் குறைவான அளவே கொரோனா தொற்றுக்கு எதிராக முழுமையாக தடுப்பூசி செலுத்தப்பட்டிருப்பதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.

இதில் கடந்த மே மாதம் இடம்பெற்ற உலக சுகாதார மாநாட்டில் நிர்ணயிக்கப்பட்ட, செப்டெம்பர் 30 ஆம் திகதிக்கு 10 வீதம் தடுப்பூசி பெற்றிருக்கும் இலக்கை 54 நாடுகள் கொண்ட ஆபிரிக்காவில் பதினைந்து நாடுகளே எட்டியுள்ளன.

‘இந்த புதிய தரவுகள் சாதாரண அடைவை எட்டியிருப்பதை காட்டுகின்றபோதும் இந்த ஆண்டு இறுதியில் மக்கள் தொகையில் 40 வீதத்தினர் தடுப்பூசி பெற்றிருக்க வேண்டும் என்ற உலக சுகாதார அமைப்பின் இலக்கை எட்ட நீண்ட தூரம் செல்ல வேண்டும்’ என்று அந்த அமைப்பின் ஆபிரிக்க பிராந்தியத்திற்கான தடுப்பூசி தொடர்பான இணைப்பாளர் ரிச்சர்ட் மிஹிகோ தெரிவித்தார்.

தடுப்பூசி ஏற்றுமதி அதிகரித்தபோதும் ஆபிரிக்காவில் அதன் விநியோகம் இன்னும் சவால் மிக்கதாகவே காணப்படுவதாக மிஹிகோ கூறினார்.

செப்டெம்பரில் ஆபிரிக்கா பிராந்தியத்திற்கு மொத்தம் 23 மில்லியன் தடுப்பு மருந்துகள் சென்றடைந்துள்ளன. இது கடந்த ஜூன் மாதத்தை விடவும் 10 மடங்கு அதிகரிப்பாக உள்ளது.

Sat, 10/02/2021 - 12:06


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை