ஊவா, தென் மாகாண பாடசாலைகளை 18, 21ஆம் திகதிகளில் திறக்க உத்தேசம்

மாகாண ஆளுநர்களால் நடவடிக்கைகள் முன்னெடுப்பு 

தனிமைப்படுத்தலுக்கான ஊரடங்குச் சட்டம் நீக்கப்பட்டு நாடு இயல்பு நிலைக்கு திரும்பிக்கொண்டிருக்கும் இச்சந்தர்ப்பத்தில் ஊவா மற்றும் தென் மாகாணங்களிலுள்ள 200 மாணவர்களுக்கும் குறைவான பாடசாலைகளை இம் மாத நடுப்பகுதியில் திறப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. 

ஊவா மாகாணத்திலுள்ள 200 மாணவர்களுக்கும் குறைவாகவுள்ள பாடசாலைகளை இந்த மாதம் 18ஆம் திகதியும் தென் மாகாணத்திலுள்ள 200 மாணவர்களுக்கும் குறைவான பாடசாலைகளை எதிர்வரும் 21ஆம் திகதியும் திறப்பதற்கு உத்தேசிக்கப்பட்டுள்ளதாக அந்த மாகாணங்களின் ஆளுநர்கள் தெரிவித்துள்ளனர். 
ஊவா மாகாணத்திலுள்ள மேற்படி பாடசாலைகளைத் திறப்பதற்கு தேவையான வசதிகளை ஏற்பாடு செய்யுமாறு மாகாணத்திலுள்ள அனைத்து கல்வி அலுவலகங்களுக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளதாக ஊவா மாகாண ஆளுநர் ஏ.ஜே.எம். முஸம்மில் தெரிவித்துள்ளார். 

அந்தப் பாடசாலைகளின் சுகாதார நடைமுறைகள் மற்றும் போக்குவரத்து வசதிகளை பெற்றுக்கொடுக்கும் வகையில் செயற்திட்டங்களை முன்னெடுக்குமாறு அனைத்து வலயக்கல்விப் பணிப்பாளர்களுக்கும் பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். 

அதேவேளை தென் மாகாணத்தில் 200 மாணவர்களுக்கும் குறைவான பாடசாலைகளை எதிர்வரும் 21ஆம் திகதி திறப்பதற்கு உத்தேசித்துள்ளதாக தென் மாகாண ஆளுநர் விலி கமகே தெரிவித்துள்ளார். 
அது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்:   தென் மாகாணத்தில் அவ்வாறான514 பாடசாலைகளுள்ளன. அந்த பாடசாலைகளை திறப்பது தொடர்பில் நாம் சுகாதாரத் துறையினர் மற்றும் கல்வித்துறையினருடன் இணைந்து பேச்சுவார்த்தை நடத்தினோம்

அதற்கு மேலதிகமாக பிரதேச சபைகளின் ஒத்துழைப்பையும் பெற்று பாடசாலைகளை துப்பரவு செய்தல் மற்றும் கிருமித் தொற்று நீக்கல் நடவடிக்கைகளையும் மேற்கொள்ள தீர்மானிக்கப்பட்டுள்ளது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

எவ்வாறாயினும் இந்த மாதம் 21 ஆம் திகதிக்குள் ஒன்பது மாகாணங்களிலும் உள்ள 200 மாணவர்களுக்கு குறைவான பாடசாலைகளை திறக்க முடியுமென எதிர்பார்ப்பதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார். (ஸ)

லோரன்ஸ் செல்வநாயகம் 

 
Sat, 10/02/2021 - 12:20


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை