சிரிய தலைநகரில் இராணுவ பஸ்ஸில் குண்டுத் தாக்குதல்: 13 பேர் உயிரிழப்பு

தொடர்ந்து நடந்த எறிகணை வீச்சில் 8 பேர் பலி

சிரிய தலைநகர் டமஸ்கஸில் இராணுவ பஸ் வண்டி ஒன்றின் மீது இடம்பெற்ற குண்டுத் தாக்குதலில் குறைந்து 13 பேர் கொல்லப்பட்டதாக அரச ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.

நேற்று புதன்கிழமை சூரியோதயத்திற்கு பின்னர் ஜிஸ்ர் அல் ரயிஸ் பாலத்திற்குக் கீழால் இந்த பஸ் வண்டி கடக்கும்போது இரு வெடி பொருட்களால் தாக்கப்பட்டிருப்பதாக சானா செய்தி நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.

ஒரு தசாப்தமாக சிரியாவில் உள்நாட்டுப் போர் இடம்பெற்று வந்தபோதும் தலைநகரில் இவ்வாறான தாக்குதல்கள் இடம்பெறுவது அரிதான ஒன்றாக உள்ளது.

இந்தத் தாக்குதலுக்கு எந்தத் தரப்பும் பொறுப்பேற்காதபோதும் இஸ்லாமிய அரசுக் குழு மீது சந்தேகம் எழுப்பப்பட்டுள்ளது.

இந்த தாக்குதல் இடம்பெற்ற விரைவில் இராணுவத்தின் எறிகணைத் தாக்குதலில் அரச எதிர்ப்பாளர் கட்டுப்பாட்டில் இருக்கும் வட மேற்கில் குறைந்தது எட்டுப் பேர் கொல்லப்பட்டிருப்பதாக அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன. இத்லிப் மாகாணத்தின் அரிஹா என்ற சிறு நகரில் இடம்பெற்றிருக்கும் இந்தத் தாக்குதலில் பல பாடசாலை சிறுவர்களும் கொல்லப்பட்டிருப்பதாக மனித உரிமைகளுக்கான சிரிய கண்காணிப்பகம் குறிப்பிட்டுள்ளது.

கடந்த 2011 ஆம் ஆண்டு தொடக்கம் ஜனாதிபதி பஷர் அல் அசாத்தை பதவி கவிழ்க்கப் போராடும் கிளர்ச்சியாளர்கள் மற்றும் ஜிஹாதிக் குழுக்களின் கடைசி கோட்டையாக இத்லிப் உள்ளது.

இந்தப் போரினால் கடந்த ஒரு தசாப்தத்தில் குறைந்தது 350,000 பேர் கொல்லப்பட்டிருப்பதோடு மக்கள் தொகையில் பாதி அளவானவர்கள் தமது வீடுகளை விட்டு வெளியேற்றப்பட்டுள்ளனர். இதில் ஆறு மில்லியன் அகதிகள் வெளிநாடுகளில் அடைக்கலம் பெற்றுள்ளனர்.

கடந்த 2017 ஆம் ஆண்டு 31 பேர் கொல்லப்பட்ட தற்கொலை தாக்குதலுக்கு பின்னர் டமஸ்கஸ் நகரில் இடம்பெறும் மிகப்பெரிய தாக்குதலாக நேற்றைய தாக்குதல் உள்ளது.

 

Thu, 10/21/2021 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை