ஆப்கானுக்கு 1.2 பில். டொலர் வழங்க ஜி20 நாடுகள் உறுதி

ஆப்கானிஸ்தானுக்கு 1.2 பில்லியன் டொலர் நிவாரண நிதி வழங்க ஜி20 தலைவர்கள் உறுதியளித்துள்ளனர்.

மனிதநேய நெருக்கடி ஏற்படுவதைத் தவிர்க்கும் நோக்கில் அந்த நிவாரண நிதி வழங்கப்படுவதாக ஐரோப்பிய ஒன்றியம் குறிப்பிட்டது. அத்துடன், தலிபான் அமைப்புடன் தொடர்பில் இருப்பதன் அவசியத்தை இத்தாலி வலியுறுத்தியது.

எனினும் தலிபான்களை இதுவரை எந்த அரசும் அங்கீகரிக்காத நிலையில் தமது உதவிகள் சர்வதேச அமைப்புகள் ஊடாகவே வழங்கப்படும் என்று ஐரோப்பிய ஒன்றியம் குறிப்பிட்டுள்ளது. இதன்படி பெரும்பாலான ஜி20 நாடுகள் ஐக்கிய நாடுகள் சபை ஊடாகவே உதவிகளை வழங்கவுள்ளன.

அமெரிக்க- ஐரோப்பிய ஒன்றிய பிரதிநிதியுடன் தலிபான் அமைப்பு முதன்முறையாக நேருக்கு நேர் கலந்துரையாடலில் ஈடுபட்டது. கடந்த வார இறுதியில் ஏற்பாடு செய்யப்பட்ட அந்தப் பேச்சுவார்த்தை கட்டாரில் நடைபெற்றது. தலிபான் அமைப்பு ஆட்சிக்கு வந்ததிலிருந்து ஆப்கானிஸ்தானுக்கான சர்வதேச நிவாரண உதவிகளுக்குத் தடை விதிக்கப்பட்டது. ஆப்கானிஸ்தானின் வெளிநாட்டுச் சொத்துகளும் முடக்கப்பட்டன.   ஆப்கானில் வறுமை வீதம் அதிகரித்து வருவதோடு பொதுச் சேவைகள் வீழ்ச்சியை நெருங்கி இருப்பதாக கடந்த மாதம் ஜெனிவாவில் இடம்பெற்ற நன்கொடையாளர்கள் மாநாட்டில் வைத்து ஐ.நா செயலாளர் நாயகம் அன்டோனியோ குட்டரஸ் எச்சரித்திருந்தார். ஆப்கானிஸ்தானின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 40 வீதமானது உதவிகளாகவே கிடைப்பதாக உலக வங்கி குறிப்பிடுகிறது.

கடந்த ஓகஸ்ட் 15 ஆம் திகதி தலிபான்கள் ஆப்கானை கைப்பற்றியதை அடுத்து அமெரிக்கா அந்நாட்டு மத்திய வங்கியின் 10 பில்லின் டொலர் சொத்துகளை முடக்கியது.

Thu, 10/14/2021 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை