ஈக்வடோர் சிறையில் குற்ற கும்பல்கள் இடையே மோதல்: 116 பேர் உயிரிழப்பு

ஈக்வடோர் சிறைச்சாலையில் போட்டி குற்ற கும்பல்களுக்கு இடையே இடம்பெற்ற மோதல்களில் குறைந்தது 116 பேர் கொல்லப்பட்டிருப்பதாக அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர். இது அந்நாட்டில் இடம்பெற்ற மோசமான சிறை வன்முறையாக உள்ளது.

குவாயாகுயில் என்ற நகரில் உள்ள சிறைச்சாலையில் கடந்த செவ்வாய்க்கிழமை இரவு ஏற்பட்ட இந்த மோதல்களில் குறைந்தது ஐந்து கைதிகளின் தலைகள் துண்டிக்கப்பட்டிருப்பதோடு ஏனையவர்கள் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர்.

இதன்போது கைதிகள் கைக்குண்டுகளையும் வீசி எறிந்திருப்பதாக பொலிஸ் கொமாண்டர் பவுஸ்டோ பியுனானோ தெரிவித்துள்ளார்.

சர்வதேச போதைக்கடத்தல் கும்பல்களுடன் தொடர்புபட்டவர்கள் தடுத்து வைக்கப்பட்டிருக்கும் இந்த சிறையின் கட்டுப்பாட்டை மீண்டும் கொண்டுவர முடிந்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இதற்காக 400 பொலிஸார் பயன்படுத்தப்பட்டுள்ளனர்.

தற்போது ஈக்வடோரில் இயங்கி வரும் பலம் மிக்க மெக்சிகோ போதைக் கடத்தல் கும்பல்களாலேயே இந்த கலவரம் ஏற்பட்டிருப்பதாக உள்ளூர் ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

நிலைமை பயங்கரமாக இருந்ததாக ஈக்வடோர் சிறைச்சாலைகள் சேவை பணிப்பாளர் பொலிவர் கார்சோன் உள்ளூர் வானொலிக்குத் தெரிவித்துள்ளார்.

‘நேற்று பொலிஸார் நிலைமையை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்தபோதும், கடந்த இரவிலும் துப்பாக்கிச் சூடுகள், வெடிப்புகள் இடம்பெற்றன. இன்று (புதன்கிழமை) காலை நிலைமை முழுமையாகக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்த நிலையில் நாம் உள்ளே சோதனை இட்டபோது மேலும் உடல்கள் கண்டுபிடிக்கப்பட்டன’ என்று அவர் குறிப்பிட்டார்.

சிறைச்சாலையை தமது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவதற்காக போட்டி கும்பல்களுக்கு இடையே இடம்பெறும் மோதல்களின் தொடர்ச்சியாகவே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. கடந்த பெப்ரவரியில் இடம்பெற்ற இது போன்ற மோதலில் 79 கைதிகள் கொல்லப்பட்டனர்.

தற்போதைய மோதல் இடம்பெற்ற லிடோரல் சிறைச்சாலை நாட்டில் உள்ள மிக அபாயகரமான சிறையாக பார்க்கப்படுகிறது.

சிறையின் ஒரு பகுதியில் இருக்கும் கைதிகள் மற்றைய பகுதிகளுக்கு துளைகள் மூலம் ஊடுருவி தாக்குதல்களில் ஈடுபட்டிருப்பதாக கூறப்படுகிறது. இந்த சம்பவத்தில் மேலும் 80க்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்துள்ளனர்.

இந்த சம்பவத்தை அடுத்து ஜனாதிபதி கில்லர்மோ லசோ, சிறைச்சாலை கட்டமைப்புகளில் அவசர நிலையை பிரகடனம் செய்துள்ளார்.

Fri, 10/01/2021 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை