தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்புக்கு UK யில் தொடர்ந்தும் தடை

தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்புக்கு UK யில் தொடர்ந்தும் தடை-UK Decided to Maintain the Proscription of the LTTE as a Terrorist Organization Under the UK Terrorism Act

தமிழீழ விடுதலைப் புலிகள் (LTTE) அமைப்பை தொடர்ந்தும் தடை செய்யப்பட்ட அமைப்பாக பெயரிட ஐக்கிய இராச்சியத்தினால் (UK) தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பில் இலங்கை வெளிவிவகார அமைச்சு விடுத்துள்ள அறிவித்தல் வருமாறு,

2000ஆம் ஆண்டின் 7ஆம் இலக்க ஐக்கிய இராச்சிய பயங்கரவாதச் சட்டத்தின் கீழ் ஒரு பயங்கரவாத அமைப்பாக தடை செய்யப்படுவதற்கு ஐக்கிய இராச்சிய உள்துறைச் செயலாளர் தீர்மானித்திருக்கின்றமை குறித்து இலங்கை அரசாங்கத்திற்கு தெரியப்படுத்தப்பட்டுள்ளது.

தடைசெய்யப்பட்ட அமைப்புக்களின் மேன்முறையீட்டு ஆணைக்குழுவின் தீர்ப்பைத் தொடர்ந்து எடுக்கப்பட்ட உள்துறைச் செயலாளரின் தீர்மானமானது, ஐக்கிய இராச்சியத்தில் தமிழீழ விடுதலைப் புலிகளின் தடையை நீக்குமாறு கோரிக்கை விடுத்த தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பொன்றின் விண்ணப்பத்தை நிராகரிக்கின்றது.

எனவே, ஐரோப்பிய ஒன்றியப் பிராந்தியம் உட்பட உலகெங்கிலும் உள்ள ஏனைய 30க்கும் மேற்பட்ட நாடுகளைப் போலவே, தமிழீழ விடுதலைப் புலிகள் ஐக்கிய இராச்சியத்திலும் ஒரு தடைசெய்யப்பட்ட அமைப்பாக விளங்குகின்றது.

பொதுமக்கள் மற்றும் ஜனநாயக ரீதியாக தேர்ந்தெடுக்கப்பட்ட தலைவர்களை இலக்கு வைத்த கொடூரங்கள் மற்றும் அட்டூழியங்கள், உலகளாவிய மற்றும் பிராந்தியப் பாதுகாப்பை பாதிக்கும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்கள் மற்றும் ஏனைய குற்றச் செயல்களில் ஈடுபடுதல் ஆகியவற்றின் காரணமாக இந்த நாடுகளில் தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பு ஆரம்பத்தில் தடை செய்யப்பட்டது.

உலகளாவிய ரீதியில் தமிழீழ விடுதலைப் புலிகளின் தடையை தொடர்ந்தும் தக்கவைத்துக்கொள்வதானது, சர்வதேச வலையமைப்பின் மூலம் பயங்கரவாத நடவடிக்கைகளுக்கு நிதியுதவியளித்தல், வன்முறைத் தீவிரவாதத்தை நோக்கி இளைஞர்களை தீவிரப்படுத்துதல், இன ஒற்றுமையை சீர்குலைத்தல் மற்றும் அவர்கள் செயற்படும் ஒவ்வொரு நாட்டிலும் ஒருங்கிணைந்த வாழ்க்கையை சீர்குலைத்தல் போன்ற செயற்பாடுகளில் ஈடுபடும் குறித்த அமைப்பின் எஞ்சிய நபர்களால் தொடர்ந்தும் ஏற்படுத்தப்படும் அச்சுறுத்தலை எதிர்ப்பதனை அங்கீகரிப்பதாகும்.

பயங்கரவாதத்திற்கு எதிரான உலகளாவிய போராட்டத்தில் ஐக்கிய இராச்சியம் மற்றும் அனைத்து அரசாங்கங்களுடனான கூட்டுறவை இலங்கை அரசாங்கம் பாராட்டுவதுடன், குடிமக்களின் உயிருக்கு அச்சுறுத்தலையும், உலகளாவிய மற்றும் பிராந்திய அமைதி மற்றும் பாதுகாப்பிற்கு ஆபத்தையும் விளைவிக்கும் பயங்கரவாதம் மற்றும் வன்முறைத் தீவிரவாதத்தைத் தணிப்பதற்கான அனைத்து முயற்சிகளிலும் ஐக்கிய இராச்சியத்துடன் இணைந்து பணியாற்றுவதற்கு உறுதிபூண்டுள்ளது.

Thu, 09/02/2021 - 23:08


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை