முகக்கவசம் அணியுமாறு கூறிய PHI மீது தாக்குதல்

இருவர் கைது : 06 வரை விளக்கமறியல்

கிரிபாவ பொலிஸ் பிரிவில் திம்பிரிபொகுர பிரதேசத்தில் கடமையில் ஈடுபட்டிருந்த பொது சுகாதார பரிசோதகரை தாக்கிய சந்தேகத்தில் இருவர் கைது செய்யப்பட்டு 6 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.  கிரிபாவ பொலிஸ் பிரிவில் திம்பிரிபொகுர பிரதேசத்தில் கிரிபாவ சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவில் பொதுச் சுகாதார பரிசோதகர் கொவிட் -19 தொற்றாளர் ஒருவர் தொடர்பான தகவல்களை சேகரிப்பதற்காகச் சென்றுள்ளார். இதன்போது முகக்கவசம் அணியாமல் வீதியில் மோட்டார் சைக்கிளில் வந்த இருவரை அவர்கள் பயணித்த மோட்டார் சைக்கிளை நிறுத்தி குறித்த பொது சுகாதார பரிசோதகர் எச்சரித்துள்ளார்.

இதன்போது இரு நபர்களும் பொது சுகாதார பரிசோதகரை தகாத வார்த்தைகளால் திட்டி அவரை தாக்கியுள்ளனர். இது தொடர்பில் தாக்குதலுக்குள்ளான பொது சுகாதார பரிசோதகர் கிரிபாவ பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடளித்துள்ளார். சம்பவம் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்த பொலிஸார் சந்தேக நபர்களை நேற்று முன்தினம் அதிகாலை கைது செய்தனர். இவ்வாறு கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் 24 மற்றும் 42 வயதுடைய திம்பிரிபொகுர மற்றும் அஷோகபுர ஆகிய பிரதேங்களைச் சேர்ந்தவர்களாவர்.

சந்தேக நபர்கள் நேற்று முன்தினம்(02) கல்கமுவ நீதிவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டதன் பின்னர் எதிர்வரும் 6 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டனர் என பொலிஸ் ஊடகப்பிரிவு மேலும் தெரிவித்துள்ளது.

 

Sat, 09/04/2021 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை