ஜனாதிபதியின் அறிவிப்பு ஒரு முற்போக்கான நடவடிக்கை

உலகத் தமிழர் பேரவை பேச்சுக்கு தயார் என அறிவிப்பு

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷவுடன் தொடர்புகொள்ளத் தயாராக இருப்பதாகவும் புலம்பெயர் தமிழர்களுடன் பேச்சுவார்த்தை நடத்த ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷ முன்வந்தமை ஒரு முற்போக்கான நடவடிக்கை எனவும் லண்டனிலுள்ள உலகத் தமிழர் பேரவை (GTF) தெரிவித்துள்ளது. ஐ.நா பொதுச்செயலாளர் அன்டோனியோ  குட்ரெஸிடம் இலங்கையின் உள்நாட்டுப் பிரச்சினைகள் நாட்டின் உள் பொறிமுறையின் மூலம் தீர்க்கப்பட வேண்டும் என்றும், இது தொடர்பான கலந்துரையாடல்களுக்கு புலம்பெயர் தமிழர்களுக்கு அழைப்பு விடுப்பதாகவும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷ கூறியிருந்தார். இந்த நிலையில், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷ தமிழ் புலம்பெயர் மக்களுடன் தொடர்புகொள்ள விரும்புகிறார் என்பது நிச்சயமாக ஒரு முற்போக்கான நடவடிக்கை என்றும் அதை தாம் வரவேற்பதாகவும் உலகத் தமிழர் பேரவையின் செய்தித் தொடர்பாளர் சுரேன் சுரேந்திரன் கூறியுள்ளார்.

இருப்பினும், ஆறு மாதங்களுக்கு முன்பு, மார்ச் 2021இல், உலகளாவிய தமிழ் மன்றம் போன்ற தடைசெய்யப்பட்ட அமைப்புகளை அரசாங்கம் வர்த்தமானியாக வெளியிட்ட நிலையில், ஜனாதிபதியின் திடீர் மனமாற்றம் குறித்தும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார். எவ்வாறிருப்பினும் தாங்கள் இலங்கை மக்களுக்கு உதவுவதை நிறுத்தவில்லை என்றும் அண்மையில்கூட, பல மில்லியன் அமெரிக்க டொலர் மதிப்புள்ள மருத்துவ உபகரணங்களை வடக்கு, கிழக்குக்கு மட்டுமல்லாது முழு நாட்டிற்கும் வழங்க முன்வந்ததாக அவர் தெரிவித்துள்ளார்.

எனவே, இலங்கையின் அனைத்து மக்களின் குறைகளையும் தீர்க்க, தாங்கள் யாருடனும் பேசத் தயார் என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார். ஜனாதிபதி பேச விரும்பும் உள்நாட்டு வழிமுறைகளைப் பொறுத்தவரை, நீதித்துறை அல்லாத செயல்முறைகள் மற்றும் வழிமுறைகள் குறித்து விவாதிப்பதற்கும் மகிழ்ச்சியாக இருக்கும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

Thu, 09/23/2021 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை