புலமைப்பித்தன் நேற்று காலமானார்

தமிழக கவிஞரும், பாடலாசிரியருமான புலமைப்பித்தன் உடல்நலக் குறைவு காரணமாக தனியார் மருத்துவமனையில் சிகிச்சை  பெற்று வந்த நிலையில் நேற்று தனது 85ஆவது வயதில் சென்னையில் காலமானார்.

உயிர் காக்கும் மருத்துவ உபகரணங்களின் உதவியுடன் அவருக்கு தீவிர சிகிச்சையளிக்கப்பட்டு வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார்.

கடந்த வாரம் செவ்வாய்க்கிழமை அதிகாலை அவருக்கு திடீரென உடல்நலக் குறைவு ஏற்பட்டதால் சென்னை அடையாறில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். வயோதிபம் மற்றும் உடல் உறுப்புகளின் செயல்பாடு குறைவு ஏற்பட்டதால் அவருக்கு வெண்டிலேட்டர் சிகிச்சை அளிக்கப்பட்டது. தொடர் மருத்துவக் கண்காணிப்பில் இருந்துவந்த நிலையில் சிகிச்சை பலனின்றி அவர் காலமானார்.

சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையிலிருந்து, அவரது உடல் நீலாங்கரையில் உள்ள இல்லத்துக்குக் கொண்டு செல்லப்படுவதாகவும், அங்கு பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

காலத்தால் அழியாத திரைப்பாடல்களை எழுதிய பிரபல திரைப்படப் பாடலாசிரியரான புலமைப்பித்தன் , தமிழக சட்ட மேலவையின் முன்னாள் துணைத் தலைவராகவும் இருந்துள்ளார்.

முன்னாள் முதல்வர் எம்ஜிஆர் நடிப்பில் வெளியான குடியிருந்த கோயில் திரைப்படத்தில் “நான் யார் நான் யார் நீ யார்?” என்ற பாடலின் மூலம் மக்கள் எல்லோருக்கும் தான் யார் என்று தெரியவைத்தவர் புலமைப்பித்தன்.

ராமசாமி என்ற இயற்பெயர் கொண்ட புலமைப்பித்தன், 1935ஆம் ஆண்டு அக்டோபர் 6ஆம் தேதி கோவையில் பிறந்தவர். சாந்தோம் உயர்நிலைப் பள்ளியில் தமிழ் ஆசிரியராகப் பணியாற்றியவர். எம்ஜிஆர் நடிப்பில் வெளியான குடியிருந்த கோயில் படத்தில் “நான் யார் நான் யார் நீ யார்?” திரைப்படப் பாடல் மூலம் மிகச்சிறந்த கவிஞர் என்று புகழ்பெற்றவர்.

அது மட்டுமல்ல, மக்கள் மனதில் இன்று வரை நீங்க இடம்பிடித்த திரையிசைப் பாடல்களான “நீங்க நல்லா இருக்கணும்.. நாடு முன்னேற”,“ஓடி ஓடி உழைக்கணும்.. ஊருக்கெல்லாம் கொடுக்கணும்”,“சிரித்து வாழ வேண்டும்.. பிறர் சிரிக்க வாழ்ந்திடாதே..”,“ஆயிரம் நிலவே வா..”,“பாடும்போது நான் தென்றல் காற்று”,“பட்டுவண்ண ரோசாவாம்”,“உச்சி வகுந்தெடுத்து பிச்சிப்பூ”,“புஞ்சை உண்டு நஞ்சை உண்டு..” என ஏராளமான திரைப் பாடல்களை எழுதி புகழ்பெற்றவர் புலமைப்பித்தன்.

காலத்தால் அழியாத பல திரையிசைப் பாடல் ளை எழுதிய புலமைப்பித்தன், நான்கு முறை தமிழக அரசின் சிறந்த பாடலாசிரியருக்கான விருதினைப் பெற்றுள்ளார். கடந்த 2015ஆம் ஆண்டு வடிவேலு நடிப்பில் வெளியான ‘எலி’ படத்திற்காக தனது கடைசி பாடலை எழுதியிருந்தார்.

 

Thu, 09/09/2021 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை