வான் நோக்கி தலிபான்கள் நடத்திய துப்பாக்கி சூட்டில் எழுபது பேர் உயிரிழந்ததாக அச்சம்

ஆப்கானிஸ்தானின் பல பகுதிகளில் தலிபான்கள் தமது வெற்றியைக் கொண்டாடும் முகமாக ஆகாயத்தை நோக்கி தீவிர துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டதில் சுமர் 70 பேர் வரை உயிரிழந்திருக்கலாம் என அஞ்சப்படுகிறது.

பஞ்ச்சீர் பள்ளத்தாக்கை தம் வசப்படுத்த தற்போது தலிபான் படையினர் மேற்கொண்டுவரும் தாக்குதலில் தலிபான் வெற்றியீட்டியிருப்பதாக வெளியான தகவலையடுத்தே வெற்றிக்களிப்பில் நாடெங்கும் இத்துப்பாக்கி வேட்டுகள் தீர்க்கப்பட்டதாக அறிய முடிகிறது.

இத்துப்பாக்கி பிரயோகத்தில் காபூலில் 17 பேர் மரணமடைந்ததாகவும் 40 பேர் காயமுற்று மருத்துவமனையில் சேர்க்கப்பட்டதாகவும் ஜலலாபாத் நகரில் மேலும் 17 பேர் கொல்லப்பட்டதாகவும் தெரிகிறது. நாட்டின் ஏனைய பகுதிகளில் மொத்தமாக எத்தனைபேர் உயிரிழந்தனர் என்பது பற்றிய விபரங்கள் இன்னும் ஊர்ஜிதம் செய்யப்படவில்லை.

எனினும் தலிபான் அதிகாரிகள் இச் சம்பவத்தைக் கண்டித்திருப்பதோடு மீண்டும் நடக்குமானால் ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படுமென எச்சரித்துள்ளனர். தலிபான் இயக்கத்தை நிறுவிய முல்லா ஒமரின் மகனான முல்லா யாக்கூப் மஜாஹிட், இனிமேல் எவரேனும் ஆகாய துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டால் அவர்கள் நிராயுதபாணியாக்கப்பட்டு தண்டிக்கப்படுவார்கள் எனக் கூறியுள்ளார்.

திருமணம் போன்ற கொண்டாட்டங்களின் போது ஆகாயத்தை நோக்கி துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்வது மகிழ்ச்சியின் வெளிப்பாடாக ஆப்கானிஸ்தானில் கருதப்படுகிறது. இதேசமயம் பஞ்ச்சீரில் இன்னும் மோதல் நீடித்து வருவதாகவே தகவல்கள் வெ ளிவந்தவண்ணமுள்ளன.

Wed, 09/08/2021 - 10:04


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை