ஜப்பானில் மேலும் ஒரு மில்லியன் மொடர்னா தடுப்பு மருந்து நீக்கம்

ஜப்பானில் மேலும் ஒரு மில்லியன் முறை போடக்கூடிய மொடர்னா தடுப்பு மருந்துகள் பயன்பாட்டிலிருந்து விலக்கப்பட்டுள்ளன.

அவற்றையும் சேர்த்து அங்கு இரண்டரை மில்லியனுக்கும் மேற்பட்ட முறை பயன்படுத்தத் தேவையான தடுப்பு மருந்துகள் நீக்கப்பட்டுள்ளன.

டோக்கியோவுக்கு அருகிலுள்ள குன்மா வட்டாரத்தில், இரண்டு தொகுதித் தடுப்பு மருந்துகளில் நுண்ணிய கறுப்பு மாசு கண்டறியப்பட்டதால் அந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

ஒக்கினாவாவில் தடுப்பு மருந்துக் குப்பியிலும், ஊசிகளிலும் அதேபோன்ற மாசு கண்டறியப்பட்டுள்ளது.

ஊசிகளை முறையாகச் செருகி வைக்காததால், அவற்றின் ரப்பர் முனை முறிந்து போயிருக்கலாம் என்று ஜப்பானிய சுகாதார அமைச்சு கூறியது.

இதற்கிடையே, இரண்டாவது முறை மொடர்னா தடுப்பூசி போட்டுக்கொண்ட சில நாளில் 30 வயது மதிக்கத்தக்க இருவர் உயிரிழந்தனர். அது பற்றி அதிகாரிகள் விசாரணை நடத்துகின்றனர். அவர்கள் இருவருக்கும் வேறு உடல்நலக் கோளாறுகள் இல்லை என்று அதிகாரிகள் கூறினர்.

தடுப்பு மருந்துகளில் பாதுகாப்பு அல்லது செயல்திறன் குறைபாடு இருப்பதாக எதுவும் கண்டறியப்படவில்லை என்றும் அவர்கள் தெரிவித்தனர்.

மிகுந்த கவனத்துடன் தடுப்பு மருந்துகள் பயன்பாட்டிலிருந்து விலக்கப்பட்டிருப்பதாக மொடர்னா நிறுவனம் கூறியது.

பாதிக்கப்பட்ட மருந்துத் தொகுதிகள் ஜப்பானில் மட்டுமே விநியோகம் செய்யப்பட்டிருப்பதாக மொடர்னா உற்பத்திப் பங்காளி நிறுவனமான ரோ தெரிவித்துள்ளது.

Wed, 09/01/2021 - 09:04


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை