ஐ.நா பொதுச் சபைக் கூட்டம்: உலகத் தலைவர்கள் வருகை

ஐ.நா. பொதுச் சபையின் ஆண்டுக் கூட்டம் கடந்த 14ஆம் திகதி ஆரம்பித்த நிலையில் உலக நாடுகளின் தலைவர்கள் பங்கேற்கும் பொது விவாதம் நேற்று செவ்வாய்க்கிழமை ஆரம்பித்து செப். 27ஆம் திகதி வரை நடைபெறுகிறது.

கொரோனா வைரஸ் பரவல் சூழல் காரணமாக கடந்த ஆண்டு இக்கூட்டம் காணொலி முறையில் நடைபெற்றது. அதில் தலைவா்களின் பதிவு செய்யப்பட்ட உரைகள் காணொலி முறையில் ஒளிபரப்பப்பட்டன. நிகழாண்டு கொரோனா பாதிப்பு தொடர்ந்தாலும் 100க்கும் மேற்பட்ட நாடுகளைச் சேர்ந்த தலைவர்கள் நியூயோர்க்கில் உள்ள ஐ.நா. தலைமையகத்தில் நடைபெறும் பொதுச் சபையின் விவாதக் கூட்டத்தில் நேரடியாகப் பங்கேற்கின்றனர்.

ஐ.நா. பொதுச் சபையின் ஆண்டு பொது விவாதத்தில் நாடுகளின் ஜனாதிபதிகள், பிரதமர்கள் மற்றும் உயர் அதிகாரிகள் உள்நாடு, பிராந்திய, சர்வதேச பிரச்சினைகள் தொடர்பாக விவாதிப்பார்கள். காணொலி வாயிலான சந்திப்பைவிட அதிக சக்திவாய்ந்த பலனை தலைவர்களின் இந்த நேரடிச் சந்திப்பு தரும். நிகழாண்டு கொரோனா சவாலை ஒருங்கிணைந்து எதிர்கொள்வது, பிரதான கருப்பொருளாக உள்ளது. 193 உறுப்பு நாடுகளைக் கொண்ட ஐ.நாவில் 60 நாடுகளைச் சேர்ந்த தலைவர்கள் பதிவு செய்யப்பட்ட உரையைத் தருவதாகக் கூறியிருந்தாலும், 100க்கும் மேற்பட்ட நாடுகளின் தலைவர்கள் நேரடியாகப் பங்கேற்பது சர்வதேச ஒத்துழைப்பு முக்கியம் என்பதைக் காட்டுவதற்கு ஒரு வாய்ப்பாக அமைகிறது என சர்வதேசப் பிரச்சினைகள் குழுவின் ஐ.நா பணிப்பாளர் ரிச்சர்ட் கோவன் தெரிவிக்கிறார்.

பொது விவாதத்தின் முதல் நாளில் ஐ.நா. பொதுச் சபை கூட்டத்தில் அதன் பொதுச் செயலாளர் அன்டோனியோ குட்டரஸ் உரையாற்றி முடித்ததும், பாரம்பரிய வழக்கப்படி பிரேஸில் ஜனாதிபதி ஜெய்ர் பொல்சனரோ உரையாற்றினார்.

அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் முதல் முறையாக இக்கூட்டத்தில் பங்கேற்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Wed, 09/22/2021 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை