பாப்பரசரின் வத்திக்கான் தூதுவரிடம் G.L தெரிவிப்பு
உயிர்த்த ஞாயிறு தின தாக்குதல்கள் குறித்த விசாரணையின்போது வெளிவந்த தகவல்கள் தொடர்பில் பேராயர் மல்கம் ரஞ்சித் ஆண்டகை மற்றும் கத்தோலிக்க பிஷப் மாநாட்டின் பிரதிநிதிகளுக்குத் தெளிவுபடுத்தத் தயாராக இருப்பதாகவும் அதற்கான சந்திப்பொன்றை எதிர்வரும் சில தினங்களில் ஏற்பாடு செய்வதாகவும் வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் பாப்பரசரின் வத்திக்கான் தூதுவர் பேராயர் பிரையன் உடேக்வேயிடம் உறுதியளித்துள்ளார்.
பாப்பரசரின் வத்திக்கான் தூதுவர் பேராயர் பிரையன் உடேக்வே நேற்று முன்தினம் (31) வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸை வெளிவிவகார அமைச்சில் சந்தித்து பல்வேறு விடயங்கள் தொடர்பில் கலந்துரையாடினார்.
உயிர்த்த ஞாயிறு தின தாக்குதல் பேரிடர், கத்தோலிக்க திருச்சபை அனுபவித்த வலி, துன்பம், கத்தோலிக்கத் திருச்சபையின் உணர்வுகளைப் புரிந்துகொள்ளுதல் மற்றும் அதற்குப் பொறுப்பான அனைவரையும் சட்டத்தின் முன்னிறுத்துதல் ஆகியவை தொடர்பிலும் அமைச்சர் இதன்போது கருத்து வெளியிட்டார்.
தற்போது இடம்பெற்றுவரும் விசாரணையின் தன்மை தொடர்பில் பேராயர் மல்கம் ரஞ்சித் ஆண்டகை மற்றும் கத்தோலிக்க பிஷப் பேரவையின் உறுப்பினர்களுக்கு முன்கூட்டியே தெளிவுபடுத்துவதன் மூலம் பிரச்சினைகளைத் தீர்த்துக் கொள்ளமுடியும் என்றும் அதன்படி உரிய தகவல்களை வெளிப்படுத்துவதற்கு அவசியமான கலந்துரையாடலொன்று அவசியம் என்றும் அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் சுட்டிக்காட்டினார்.
from tkn