இருவேறு சிறப்புக் குழுக்கள் பலகோணங்களில் விசாரணை

தாய் உட்பட சகாக்களிடமும் துருவித்துருவி வாக்குமூலம்

தேசிய உளவுச் சேவை பயங்கரவாத தடுப்புப் பிரிவு குற்றப்புலனாய்வு பிரிவினர் தனித்தனியாகவும் விசாரணை

நியூசிலாந்தின் ஒக்லன்ட் நகர் சுப்பர் மார்க்கட்டில் பயங்கரவாத தாக்குதல் நடத்திய இலங்கையர் அந்நாட்டு பொலிஸாரால் சுட்டுக்  கொல்லப்பட்டுள்ளதையடுத்து, அந்த நபர் தொடர்பில் இலங்கையிலும் இரு வேறு சிறப்புக் குழுக்கள் பல கோணங்களில் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

எஸ்.ஐ.எஸ். தேசிய உளவுச் சேவையூடாக தனியான விசாரணையும் பயங்கரவாத தடுப்பு மற்றும் விசாரணைப் பிரிவு, சிஐடி. குற்றப் புலனாய்வுத் திணைக்களம் ஆகியவற்றுக்கு பொறுப்பான பிரதிப் பொலிஸ் மாஅதிபரின் கீழ் தனியான ஒருங்கிணைந்த விசாரணை நடத்தப்பட்டு வருவதாக அறிய முடிகிறது.

அதன் பிரகாரம் நியூசிலாந்தின் ஆக்லண்ட் பகுதியிலுள்ள சுப்பர் மார்க்கட்டில் நுழைந்த இலங்கையரான மொஹம்மட் சம்சுதீன் அஹமட் ஆதில் எனும் 32 வயதான நபரென நியூசிலாந்து பொலிஸாரால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் இந் நபரின் உறவினர்கள் சிலரிடம், நியூசிலாந்தில் சம்பவம் இடம்பெற்று 24 மணி நேரத்துக்குள்ளேயே சிறப்பு புலனாய்வுப் பிரிவின் அதிகாரிகள் விசாரணை செய்து வாக்குமூலங்களை பதிவு செய்துள்ளனர்.

மட்டக்களப்பு மாவட்டத்தின், காத்தான்குடி மற்றும் தலைநகர் கொழும்பில் வசித்துள்ள இத் தாக்குதல்தாரி கடந்த 2011 ஆம் ஆண்டு நியூசிலாந்துக்கு சென்றுள்ளமையும் அங்கு அவர் தனியாகவே வசித்து வந்துள்ளதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளன.

கடந்த 2019 ஏப்ரல் 21 ஆம் திகதி இலங்கையில் நடத்தப்பட்ட தொடர் தற்கொலை குண்டுத் தாக்குதல்களில் ஈடுபட்ட அல்லது அதனுடன் தொடர்புபட்ட நபர்களுடன் தொடர்பில் சந்தேக நபருக்கு ஏதும் தொடர்புகள் இருந்தனவா? எனவும் பிரத்தியேக விசாரணைகளில் கவனம் செலுத்தப்பட்டுள்ளதாக அறிய முடிகிறது.

கடந்த 10 வருடங்களாக இந்த இலங்கையர் நியூசிலாந்தில் வசித்து வந்துள்ளார். 05 வருடங்களாக இவரை நியூசிலாந்தின் பாதுகாப்பு தரப்பினர் கண்காணித்து வந்துள்ளனர்.

ஐஎஸ்.ஐஎஸ் பயங்கரவாத குழுவினரை பின்தொடர்ந்துள்ள இந்த இலங்கையர் கடந்த 2011 ஆம் ஆண்டில் நியூசிலாந்து சென்றுள்ளதாக இலங்கையின் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சு உறுதி செய்தது. அவர் தொடர்பில் விசேட விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் மேலதிக விடயங்களை தற்போதைக்கு வெளிப்படுத்த முடியாதென பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சின் சிரேஷ்ட அதிகாரி ஒருவர் குறிப்பிட்டார்.

நியூஸிலாந்தின், மேற்கு ஒக்லான்ட் நகரில் நியூலின் பகுதியிலுள்ள அவுஸ்திரேலிய நிறுவனத்துக்கு் சொந்தமான ‘ கவுன்ட் டவுன் ‘ எனும் சுப்பர் மார்க்கட்டில் நியூசிலாந்து நேரப்படி 03 ஆம் திகதி வெள்ளிக்கிழமை பிற்பகல் 2.45 மணியளவில் இந்தக் கத்திக் குத்து பயங்கரவாத தாக்குதல் நடத்தப்பட்டிருந்தது.

கத்திக்குத்து தாக்குதலை ஆரம்பித்த 60 விநாடிகளில் தாக்குதல்தாரி பொலிஸாரால் சுட்டுக் கொல்லப்பட்டதாக நியூசிலாந்து பிரதமர் ஜெசிந்தா ஆர்டன் தெரிவித்துள்ளார். வெறுக்கத்தக்க, தவறான இந்த செயலை செய்த நபர் மாத்திரமே இந்தத் தாக்குதலுக்கு பொறுப்பாளியாவாரென ஜெசிந்தா ஆர்டன் சம்பவத்தின் பின்னர் ஊடகங்களிடம் குறிப்பிட்டார். இந் நபர் இலங்கையை சேர்ந்த அடிப்படைவாத செயற்பாடுகளில் ஈடுபடும் ஒருவரென நியூசிலாந்து பிரதமர் ஜெசிந்தா ஆர்டன் உறுதி செய்திருந்தார்.

இந்நிலையில் இந்த விவகாரம் தொடர்பிலான விசாரணைகளுக்கு நியூசிலாந்துக்கு பூரண ஒத்துழைப்பு வழங்கப்படுமென இலங்கையின் வெளிவிவகார அமைச்சின் செயலர் ஓய்வுபெற்ற அட்மிரல் ஜயநாத் கொலம்பகே தெரிவித்தார். நியூசிலாந்து கோரும் விடயங்களை அவர்களுடன் பகிர்ந்து கொள்ளத் தயாரென அவர் தெரிவித்தார்.1989 ஆம் ஆண்டு பிறந்துள்ள தாக்குதல்தாரி, 08 வயதுவரை மட்டக்களப்பு – காத்தான்குடி பகுதியில் வசித்துள்ளதுடன் அதன் பின்னர் 1998 ஆம் ஆண்டு கொழும்புக்கு இடம்பெயர்ந்துள்ளதாக இதுவரையான புலனாய்வு தகவல்கள் ஊடாக அறிய முடிகிறது. 04 பிள்ளைகளைக் கொண்ட குடும்பத்தில் கடைக்குட்டியான தாக்குதல்தாரி, ஆரம்பத்தில் மட்டக்களப்பிலும் பின்னர் கொழும்பிலும் இருவேறு பிரபல பாடசாலைகளில் கல்வி கற்றுள்ளதுடன் உயர் தர பரீட்சை எழுதி 05 ஆண்டுகளின் பின்னர் நியூசிலாந்து சென்றுள்ளார்.

அவரது ஏனைய சகோதர, சகோதரிகள் வெளிநாடுகளிலேயே வசிக்கின்றனர். தற்போது காத்தான்குடி பகுதியில் அவரது தாயார் மட்டும் வசிப்பதாக தெரிவித்த உயர் பொலிஸ் அதிகாரி , அவரிடம் சம்பவத்தின் பின்னர் தாக்குதல்தாரி தொடர்பில் விசாரிக்கப்பட்டதாக சுட்டிக்காட்டினார்.

2011 ஆம் ஆண்டு நியூசிலாந்துக்கு சென்றுள்ள தாக்குதல்தாரி, அங்கு இரு சந்தர்ப்பங்களில் கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கப்படுகிறது.

உடைமையில் கத்தி ஒன்றை வைத்திருந்தமை, பிரான்ஸ் மற்றும் பிரசல்ஸ் பயங்கரவாத தாக்குதல்கள் தொடர்பில் ஆதரவுக் கருத்துக்களை வெளிப்படுத்தி பேஸ்புக்கில் பதிவிட்டுள்ளமை, ஐஎஸ்ஐஎஸ். தாக்குதல் முறைமைகள் தொடர்பிலான காணொளிகளை வைத்திருந்தமை உள்ளிட்ட குற்றச்சாட்டுக்கள் அவர் மீதுள்ளன.

இந்நிலையிலேயே அவருக்கு எதிராக வழக்கும் தொடரப்பட்டு, ஒரு வழக்கில் போதிய ஆதாரம் இன்மையால் விடுவிக்கப்பட்டுள்ளார்.பின்னர் ஒரு முறை சிங்கப்பூருக்கு அவர் செல்ல முற்பட்டபோது, ஐஎஸ் ஐஎஸ் அமைப்பில் இணைய செல்வதாக கருதி ஒக்லன்ட் விமான நிலையத்தில் வைத்து அந்நாட்டு பொலிஸார் அவரை கைது செய்து தடுத்துள்ளனர்.

இவ்வாறான நிலையிலேயே தாக்குதல்தாரியை ‘ எஸ். ‘எனும் எழுத்தினால் அடையாளப்படுத்தும் நியூசிலாந்தின் 24 மணி நேரமும் ஆயுதம் தரித்த பயங்கரவாத எதிர்ப்பு படையணியின் வீரர்கள் ஊடாக கண்காணித்துள்ளது. 2016 முதல் இந்தக் கண்காணிப்பு இடம்பெற்றுள்ளதாக சர்வதேச பயங்கரவாத விவகார நிபுணரான பேராசிரியர் ரொஹான் குணரத்ன தெரிவித்துள்ளார்.

இதனிடையே கடந்த 2020 ஆம் ஆண்டு பெப்ரவரி 02 ஆம் திகதி லண்டனில் கத்திக் குத்து பயங்கரவாத நடவடிக்கைகளை முன்னெடுத்த சுதேஷ் அமான் எனும் பயங்கரவாதிக்கும், நியூசிலாந்தின் தாக்குதல்களை முன்னெடுத்த நபருக்குமிடையில் தொடர்புகள் இருந்தனவா எனவும் விசாரணைகள் இடம்பெறுவதாக அறிய முடிகிறது. லண்டன் தாக்குதலுடன் தொடர்புடைய தாக்குதல்தாரியும் இலங்கை வம்சாவழியை சேர்ந்தவராக இருந்தமை இதற்கான முக்கிய காரணியாக கூறப்படுகிறது.

 

யார் இந்த ஆதில்?

Mon, 09/06/2021 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை