சமூக ஊடக வலையமைப்புகளில் நீதித்துறைக்கு குந்தக விமர்சனங்கள்

வதந்திகளின் அடிப்படையில் ஆதாரமற்ற குற்றச்சாட்டுகள்

பல்வேறு சமூக ஊடக வலையமைப்புகளைப் பயன்படுத்தி நீதித்துறைக்கு குந்தகம் ஏற்படுத்தும் அடிப்படையற்ற விமர்சனங்களை சிலர் முன்வைக்கின்றனர். சில தீர்ப்புகள் தொடர்பான வெறும் வதந்திகளின் அடிப்படையில் ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை கூட முன்வைக்கப்படுவதாக நீதி அமைச்சர் அலி சப்ரி கூறினார்.  ஜே.வி.பி தலைவர் அநுர குமார திசானாயக்க எம்.பி பாராளுமன்றத்தில் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கையிலேயே அமைச்சர் இதனை தெரிவித்தார்.

நீதித்துறை சுதந்திரத்தில் தலையீடு செய்ய அரசாங்கம் இடங்கொடுக்காதென்றும் அவர் கூறினார்.

சில அமைப்புகள் நீதிபதிகள் மற்றும் அவர்களின் குடும்பங்கள் பற்றி தவறான செய்திகளை வெளியிடுகின்றன. நீதித்துறையின் சுதந்திரத்தில் பொதுமக்களின் நம்பிக்கையை குறைத்து மதிப்பிடுவதற்கு இவை முயல்கின்றன. 25 வருட தொழில் அனுபவம் கொண்ட ஒரு சட்டத்தரணியாக, நீதித்துறையின் சுதந்திரத்திற்கு குந்தகம் ஏற்படுவதற்கு ஒருபோதும் அனுமதிக்க மாட்டேன் என தெரிவித்த அமைச்சர், நீதித்துறையின் சுதந்திரத்தை பாதுகாப்பதில் தான் உறுதியாக உள்ளதாகவும் கூறினார். கொவிட்19 தொற்றுநோய்க்கு மத்தியில் கூட, அவசர வழக்குகளுக்காக நீதிமன்றங்கள் திறந்து வைக்கப்பட்டுள்ளதாகவும், கைதிகளை நீதிமன்றத்திற்கு அழைத்து வராமல் காணொளி தொழில்நுட்பம் மூலம் வழக்குகளை விசாரிக்க வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் கூறினார். இதற்காக கூடுதல் நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.

நீதிபதிகளின் தொழில் திறனை மேம்படுத்துவதற்காக பல்வேறு கருத்தரங்குகள் மற்றும் பட்டறைகள் நடத்தப்படுவதை சுட்டிக்காட்டிய அமைச்சர், நீதிச்சேவை ஆணைக்குழுவால் நிர்வகிக்கப்படும் நீதிபதிகள் ஆணைக்குழுவால் இவை ஏற்பாடு செய்யப்படுகின்றன. இந்த விடயத்தில் அரசு தலையீடு செய்வதில்லையென்றும் அமைச்சர் குறிப்பிட்டார்.

 எம்.எஸ்.பாஹிம், சுப்பிரமணியம் நிசாந்தன்

Thu, 09/09/2021 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை