கோப் குழுவின் விசேட கூட்டம் நேற்று பாராளுமன்றில் கூடியது

அரசாங்கப் பொறுப்பு முயற்சிகள் பற்றிய குழுவின் (கோப் குழு) விசேட கூட்டம் அதன் தலைவர் பேராசிரியர் சரித ஹேரத் தலைமையில் நேற்று (21) பாராளுமன்றத்தில் நடைபெற்றது. குழுவின் எதிர்கால செயற்பாடுகள் மற்றும் குழு முன்னிலையில் அழைக்கப்படவுள்ள நிறுவனங்கள் பற்றிய விடயங்கள் இதில் கலந்துரையாடப்பட்டன.

09ஆவது பாராளுமன்றத்தின் கோப் குழுவின் இரண்டாவது அறிக்கையின் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்துவதில் ஏற்பட்டுள்ள முன்னேற்றம் குறித்து இக்குழு கவனம் செலுத்தியது. இதற்கமைய இலங்கை தொழில்நுட்ப நிறுவனம் (SLIIT) தொடர்பான அறிக்கையை அடிப்படையாகக் கொண்டு பாராளுமன்ற விவாதமொன்றை நடத்த வேண்டுமென சபாநாயகரிடம் விடுத்த வேண்டுகோளுக்கமைய இதனை விரைவில் முன்னெடுக்க வேண்டியதன் அவசியத்தையும் குழுவின் உறுப்பினர்கள் சுட்டிக்காட்டினர். இதற்கமைய பாராளுமன்ற அலுவல்கள் பற்றிய குழுவின் அடுத்த கூட்டத்தில் இவ்விடயத்தை முன்வைப்பதற்கும் இங்கு தீர்மானிக்கப்பட்டது.

அத்துடன், தற்பொழுது கருத்தாடல்களுக்கு உள்ளாகியுள்ள பிரச்சினைகள் மற்றும் அவற்றுடன் சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் தொடர்பில் உறுப்பினர்கள் தமது கருத்துக்களை முன்வைத்தனர். இவற்றில் இலங்கை மின்சாரசபை, இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம், லிட்ரோ கேஸ் போன்ற நிறுவனங்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் பற்றியும் இங்கு கலந்துரையாடப்பட்டது. இந்தப் பிரச்சினைகள் குறித்து எதிர்வரும் கோப் குழுக் கூட்டங்களில் கலந்துரையாட எதிர்பார்த்திருப்பதாகவும் கோப் குழுவின் தலைவர் இங்கு தெரிவித்தார். கோப் குழுவின் உறுப்பினர்களான அமைச்சர் சரத் வீரசேக்கர, இராஜாங்க அமைச்சர் சுசில் பிரேமஜயந்த, பாராளுமன்ற உறுப்பினர்களான அனுரகுமார திசாநாயக, பாட்டலி சம்பிக ரவணக்க, ரவூப் ஹக்கீம், ஜகத் புஷ்பகுமார, நளின் பண்டார, எஸ்.எம். மரிக்கார், மதுர விதானகே மற்றும் எஸ். இராசமாணிக்கம் ஆகியோரும், கணக்காய்வாளர் நாயகம் டபிள்யூ.பி.சி. விக்கிரமரட்ண ஆகியோரும் இக்கூட்டத்தில் கலந்துகொண்டனர்.

Wed, 09/22/2021 - 09:24


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை