அமெரிக்க ஊழியர்கள் தடுப்பூசி பெற ஜனாதிபதி பைடன் உத்தரவு

கொவிட்-19 தொற்றுக்கு எதிரான புதிய கட்டுப்பாடுகள் பற்றி அறிவித்திருக்கும் அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன், பெரிய நிறுவனங்களில் பணியாற்றுபவர்கள் தடுப்பூசி பெற வேண்டும் அல்லது வாரத்துக்கு ஒரு முறை வைரஸ் சோதனைக்கு முகம்கொடுக்க வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார்.

இதில் மில்லியன் கணக்கான அரச ஊழியர்கள் தடுப்பூசி பெறுவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவில் கொரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையிலேயே கட்டுப்பாடுகள் கடுமையாக்கப்பட்டுள்ளன.

வேகமாக பரவக்கூடிய டெல்டா தொற்று அங்கு தீவிரம் அடைந்திருக்கும் நிலையில் பல மாநிலங்களில் மருத்துவமனைகள் நிரம்பி வழிகின்றன.

சுமார் 100 மில்லியன் ஊழியர்களை உள்ளடக்கும் வகையிலேயே இந்த புதிய கட்டுப்பாடுகள் கொண்டுவரப்பட்டுள்ளன.

‘இது சுதந்திரம் அல்லது தனிமனித விருப்பு பற்றியதல்ல. இது உங்களதும் உங்களைச் சூழவுள்ளவர்களதும் பாதுகாப்பு பற்றியது’ என்று பைடன் குறிப்பிட்டுள்ளார்.

கொரோனா தொற்றினால் கடந்த ஆண்டில் அமெரிக்காவில் 650,000க்கும் அதிகமானவர்கள் உயிரிழந்துள்ளனர். சுமார் 80 மில்லியன் பேர் இன்னும் தடுப்பூசி பெறாதுள்ளனர்.

Sat, 09/11/2021 - 10:06


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை