ஐக்கிய நாடுகள் பொதுக் கூட்டத்தில் உரையாற்ற தலிபான்கள் கோரிக்கை

அமெரிக்காவின் நியுயோர்க் நகரில் இந்த வாரம் இடம்பெற்று வரும் ஐக்கிய நாடுகள் பொதுச் சபை கூட்டத்தில் உலகத் தலைவர்கள் முன் உரையாற்றுவதற்கு தலிபான்கள் அனுமதி கோரியுள்ளனர்.

அந்தக் குழுவின் வெளியுறவு அமைச்சர் இதற்கான கோரிக்கைக் கடிதத்தை கடந்த திங்கட்கிழமை சமர்ப்பித்துள்ளார். இந்தக் கோரிக்கை பற்றி ஐ.நா குழு முடிவு ஒன்றை எடுக்கவுள்ளது.

கட்டார் தலைநகர் டோஹாவை தளமாகக் கொண்ட தலிபான் பேச்சாளர் சுஹைல் சஹீனை, ஆப்கானுக்கான ஐ.நா தூதுவராக அது நியமித்துள்ளது.

கடந்த மாதம் தலிபான்கள் ஆப்கானை கைப்பற்றிய நிலையில், வெளியேற்றப்பட்ட அரசின் தூதுவர் தொடர்ந்தும் ஆப்கானை பிரதிநிதித்துவப்படுத்தவில்லை என்று அந்தக் குழு குறிப்பிட்டுள்ளது. இந்நிலையில் உயர்மட்ட விவாதத்தில் கலந்து கொள்வதற்கான இந்த கோரிக்கை, அமெரிக்கா, சீனா மற்றும் ரஷ்யா உட்பட ஒன்பது உறுப்பு நாடுகள் அங்கம் வகிக்கும் நற்சான்றளிக்கும் குழு ஒன்றினாலேயே பரிசீலிக்கப்படுவதாக ஐ.நா பேச்சாளர் தெரிவத்தார்.

எனினும் வரும் திங்கட்கிழமை பொதுக் கூட்ட அமர்வு முடியும் வரை இந்தக் குழு கூடுவதற்கு வாய்ப்பு இல்லை என்றும் அதுவரை ஐ.நா விதிகளின்படி முந்தைய அரசைச் சேர்ந்த குலாம் இசாக்சாய் தொடர்ந்தும் ஐ.நாவுக்கான ஆப்கான் தூதுவராக இருப்பார் என்றும் அவர் குறிப்பிட்டார்.

இசாக்சாய் வரும் செப்டெம்பர் 27 ஆம் திகதி இந்தக் கூட்டத்தின் இறுதி நாளில் உரையாற்ற எதிர்பார்த்துள்ளார். ஆனால் அவர் எமது நாட்டை பிரதிநிதித்துவப்படுத்தவில்லை என்று தலிபான்கள் குறிப்பிட்டுள்ளனர். முன்னதாக 1996 தொடக்கம் 2001 ஆம் ஆண்டு வரை ஆப்கானில் தலிபான்கள் ஆட்சி புரிந்தபோது, அந்தக் குழுவால் ஆட்சி கவிழ்க்கப்பட்ட அரசைச் சேர்ந்தவர் ஆப்கானுக்கான ஐ.நா தூதுவராக தொடர்ந்து செயற்பட்டமை குறிப்பிடத்தக்கது.

 

Thu, 09/23/2021 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை