ஆப்கான் பல்கலைக்கழகங்களில் பெண்களுக்கு புதிய கட்டுப்பாடு

ஆப்கானிஸ்தானில் பெண்கள் பட்டப்பின்படிப்பு தரம் உட்பட, பல்கலைக்கழகங்களில் கல்வி கற்க முடியும் என்றும் ஆனால், ஆண்கள் மற்றும் பெண்களுக்கு தனியே பிரிக்கப்பட்ட வகுப்பறைகளில், தலையை மறைத்திருப்பது கட்டாயம் என்றும் புதிய கட்டுப்பாடு கொண்டுவரப்பட்டுள்ளது.

உயர் கல்வி அமைச்சர் அப்துல் பக்கி ஹக்கானி இந்த புதிய கொள்கைகள் பற்றிய அறிவிப்பை கடந்த ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற செய்தியாளர் மாநாட்டில் குறிப்பிட்டார். கடந்த வாரம் ஆண்களை மாத்திரம் கொண்ட புதிய அரசை தலிபான்கள் அறிவித்த நிலையில், அரச பணிகளை ஆரம்பிப்பதைக் காட்டுவதாக ஜனாதிபதி மாளிகையில் தமது கொடியை ஏற்றிய அடுத்த தினத்திலேயே இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.

இருபது ஆண்டுகளுக்கு முன்னர் ஆப்கானில் ஆட்சியில் இருந்த தலிபான்கள் அப்போது அமுல்படுத்திய கடும்போக்கான சட்டங்களை மீண்டும் அமுல்படுத்தும் அச்சம் தொடர்ந்து நீடித்து வருகிறது. அப்போது பெண்கள் கல்வி கற்பது மறுக்கப்பட்டு அவர்கள் பொது வாழ்வில் இருந்து ஒதுக்கப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

‘பெண்கள் படிப்பதற்கு அனுமதிக்கப்படுவார்கள். ஆனால் ஆண்களுடன் அல்ல’ என்று கூறிய ஹக்கானி, எந்தெந்தப் பாடங்களை கற்பிக்க வேண்டும் என்பது பற்றிய அறிவிப்பையும் வெளியிட்டார். ஆப்கானிஸ்தானில் பல்கலைக்கழகங்கள் ஆண்களும் பெண்களும் சேர்ந்து படிப்பவையாக இருந்தன. அருகருகே ஆண்களும் பெண்களும் இருந்தாலும், ஆடைக் கட்டுப்பாட்டைக் கடைப்பிடிக்க வேண்டிய அவசியம் இல்லாதிருந்தது.

ஆனால் தலிபான்கள் பதவிக்கு வந்த பின்னர் ஆண்களும் பெண்களும் சேர்ந்து படிக்கும் முறையை முடிவுக்கு கொண்டு வருவதில் ஹக்கானிக்கு எந்தத் தயக்கமும் இருக்கவில்லை.

‘கலப்புக் கல்வி முறையை முடிவுக்குக் கொண்டு வருவதில் எங்களுக்கு எந்த பிரச்சினையும் இல்லை,’ என்று அவர் கூறினார். ‘மக்கள் முஸ்லிம்கள். அவர்கள் அதை ஏற்றுக்கொள்வார்கள்.’ புதிய நடைமுறைகள் பெண்கள் கல்வி கற்க வருவதைத் தடுக்கும் என்று சிலர் கருத்துக் கூறியுள்ளனர். ஏனெனில் பல்கலைக்கழகங்களில் தனி வகுப்புகள் நடத்துவதற்கான வசதிகள் இல்லை. ஆனால், போதுமான பெண் ஆசிரியர்கள் இருப்பதாகவும், அவர்கள் கிடைக்காத இடங்களில் மாற்று வழிகள் காணப்படுவதாகவும் ஹக்கானி கூறியுள்ளார்.

“இது அனைத்தும் பல்கலைக்கழகத்தில் இருக்கும் வசதிகளைப் பொறுத்தது,” என்று அவர் கூறினார். “நாங்கள் திரைச்சீலைக்குப் பின்னால் இருந்து கற்பிக்க ஆண் ஆசிரியர்களைப் பயன்படுத்தலாம். அல்லது தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தலாம்.”

ஆரம்ப பாடசாலையில் இருந்தே மாணவர்களும், மாணவிகளும் தனித்தனியே கல்வி கற்கும் நடைமுறை ஆப்கானிஸ்தான் முழுவதுமே இருந்து வருகிறது. ஆனால் பல்கலைக்கழகங்களில் அப்படியில்லை.

பல்கலைக்கழகங்களில் பயிற்றுவிக்கப்படும் பாடங்கள் முற்றிலுமாக மறுபரிசீலனை செய்யப்படும் என்றும் அமைச்சர் ஹக்கானி கூறினார். “மற்ற நாடுகளுடன் போட்டியிடும் வகையிலும், அதே நேரத்தில் இஸ்லாமிய, தேசிய மற்றும் வரலாற்று மதிப்புகளுக்கு ஏற்ப இஸ்லாமிய பாடத்திட்டத்தை உருவாக்க விரும்புவதாக” அவர் செய்தியாளர்களிடம் கூறினார்.

காபூலில் உள்ள ஷாஹீத் ரப்பானி கல்வி பல்கலைக்கழகத்தில் கடந்த ஞாயிறன்று தலிபான்களின் பாலினக் கொள்கைகளை ஆதரிக்கும் பெண்களின் ஆர்ப்பாட்டத்திற்குப் பின்னர் இந்த அறிவிப்பு வந்துள்ளது.

கறுப்பு நிகாப் அணிந்த நூற்றுக்கணக்கான பெண்கள், கையில் தலிபான் கொடியுடன் தலிபான்களின் ஆட்சியைப் புகழ்ந்தும், பெண்கள் உரிமைகளைப் பாதுகாக்கக் கோரி நாடு முழுவதும் பெரிய ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டவர்களை தாக்கி பேசும் உரையை கேட்டனர்.

Tue, 09/14/2021 - 10:04


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை