அவுஸ்திரேலிய நிலக்கரிக்கு சீனா தடை; பாதிப்பை ஈடுசெய்யும் ஜப்பான், இந்தியா

அவுஸ்திரேலியாவில் இருந்து நிலக்கரியை இறக்குமதி செய்வதை சீனா நிறுத்தியதால் அவுஸ்திரேலியா பாதிப்படையவில்லை என்றும் இந்தியா உட்பட ஏனைய நாடுகளின் இறக்குமதி அதிகரிப்பால் அந்த இழப்பு ஈடுசெய்யப்படுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

தொழிற்சாலைப் பாவனைக்கான நிலக்கரி ஏற்றுமதியில் முன்னணி வகிக்கும் அவுஸ்திரேலியாவில் இருந்து நிலக்கரி இறக்குமதியை கடந்த அக்டோபர் மாதம் முதல் சீனா நிறுத்திக்கொண்டது. எனினும் சீனாவின் மொத்த எரிசக்தி தேவையை நிலக்கரி மின்சாரமே ஈடுசெய்து வருவதால் தொலைவில் அமைந்திருக்கும் நாடுகளில் இருந்து அதிக செலவில் சீனா தற்போது நிலக்கரியை இறக்குமதி செய்துவருகிறது. நிலக்கரியை பெருமளவில் இறக்குமதி செய்யும் ஜப்பான், இந்தியா நாடுகள் வரிசையில் சீனா முதன்மை வகிக்கிறது. சீனாவின் தடை அமுலுக்கு வந்த பின்னர் ஜப்பான் தன் அவுஸ்திரேலிய நிலக்கரி இறக்குமதியை அறுபது சதவீதத்தால் அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

சீனாவின் உருக்கு உற்பத்திக்கு அவுஸ்திரேலிய நிலக்கரி பயன்படுத்தப்பட்டு வந்தது. அந்நாட்டு நிலக்கரி நிறுத்தப்பட்டுள்ளதால் அதிக செலவில் வேறு நாடுகளில் இருந்து நிலக்கரி இறக்குமதி செய்யப்படுவதால் சீன உருக்கு உற்பத்திகளின் விலை அதிகரிக்கும் என்றும் அல்லது வேறு வகையில் செலவை ஈடுசெய்ய வேண்டியிருக்கும் என்றும் சீன உருக்கு உற்பத்தி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

தரமான அவுஸ்திரேலிய நிலக்கரிக்கு நிகரான மாற்று வழி சீனாவுக்கு இல்லை என்றாலும் அவுஸ்திரேலிய இறக்குமதித் தடையை நீக்கும் முடிவை சீனா இப்போதைக்கு எடுக்கமாட்டாது என்று இவ்வட்டாரங்கள் மேலும் தெரிவித்துள்ளன.

Sun, 09/05/2021 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை