பொதுமக்களுக்கு பயன்தரும் திட்டங்களுக்ேக நிதி ஒதுக்கீடு

தேவையற்ற அனைத்து செலவீனங்களும் நிறுத்தம்

கடன் இல்லாத நாட்டை கட்டியெழுப்புவதே அரசின் இலக்கு எனவும் தெரிவிப்பு

பாராளுமன்றத்தில் நிதியமைச்சர் பசில் ராஜபக்‌ஷ உரை

நாடு பாரதூரமான நிதி நெருக்கடியில் உள்ளது. அரச வருமானத்தைவிட செலவீனங்கள் அதிகமாகவுள்ளன. தேவையற்ற அனைத்து செலவீனங்களும் நிறுத்தப்பட்டுள்ளதுடன், பொது மக்களுக்கு பயனை தரக்கூடிய வேலைத்திட்டங்களுக்கு மாத்திரமே நிதி ஒதுக்கீடுகளும் செலவீனங்களும் மேற்கொள்ளப்படுகின்றன. அதேபோன்று வீழ்ச்சிகண்டுள்ள அந்நிய செலாவணியை வருட இறுதிக்குள் ஸ்திரமாக்குவதுடன், கடன் இல்லாத நாட்டை கட்டியெழுப்புவதே அரசாங்கத்தின் நோக்கமாகவுள்ளதாக நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஷ தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் நேற்று செவ்வாக்கிழமை நடைபெற்ற அத்தியாவசிய பொதுச் சேவை சட்டத்தின் கீழான கட்டளை, இலங்கைப் பிணையங்கள் மற்றும் பரிவர்தனை ஆணைக்குழு சட்டமூலம், உற்பத்தி வரி (விசேட ஏற்பாடுகள்) சட்டத்தின் கீழான கட்டளைகள், ஏற்றுமதி மற்றும் இறக்குமதி (கட்டுப்பாடு) சட்டத்தின் கீழான ஒழுங்குவிதிகளை சமர்ப்பித்து உரையாற்றும் போதே இவ்வாறு கூறினார். அவர் மேலும் கருத்து வெளியிடுகையில்,

முழு உலகமும் எதிர்கொண்டுள்ள கொவிட்-19 பெருந்தொற்றால் இலங்கை பொருளாதாரமும் பாதிப்புக்குள்ளாகியுள்ளது. அந்நிய செலவாணி தொடர்பில் பாரிய நெருக்கடிக்கும் எமது நாடு முகங்கொடுத்துள்ளது. அதேபோன்று தேசிய ரீதியிலான நிதி நெருக்கடிகளுக்கும் திறைசேரி முகங்கொடுத்துள்ளது. இந்த மூன்று காரணிகளே தற்போது நாடு எதிர்கொண்டுள்ள பிரதான காரணிகளாகும். அதற்கான தீர்வைத் தேட முழு அரசாங்கமும் ஒத்துழைப்புடன் செயற்படுவதுடன், எதிர்க்கட்சிகளும் பொறுப்புடன் நடந்துக்கொள்ள வேண்டும்.

இத்தகைய நெருக்கடியான சூழலில் தனியாக இந்தப் பிரச்சினைக்கு தீர்வுகாணவும் அரசியல் இலாபங்களை தேடவும் நாம் முற்படவில்லை. எதிர்க்கட்சிகள் மீது குற்றச்சாட்டுகளை சுமத்தவும் தயாரில்லை. நீண்டகாலமாக எமது பொருளாதாரத்தில் ஏற்பட்டிருந்த நெருக்கடிகள் கொவிட்-19 தொற்றுடன் உக்கிரமடைந்துள்ளது. நாட்டின் வருமானத்தைவிட செலவுகள் மீறிச்சென்றுள்ளன. இது ஓரிரண்டு ஆண்டுகள் அன்றி பல தசாப்தங்களாக தொடர்கிறது.

நாட்டுக்கும் அரசுக்கும் கிடைக்கும் வருமானம் செலவீனங்களைவிட மிகவும் குறைவாகும். நிதியை நாசமாக்குவதும் அநாவசியமான செலவீனங்களை மேற்கொள்வதும் நீண்டகாலமாக தொடர்கிறது. செலவீனங்களை குறைக்கக் கூடிய அனைத்து சந்தர்ப்பங்களிலும் குறைக்கவே எதிர்பார்க்கிறோம். கொவிட் தொற்று காரணமாக அரசுக்கு கிடைக்க வேண்டிய 1,500 முதல் 1,600 வரையான பில்லியன் வருமானம் குறைவடைந்துள்ளது. எதிர்பார்க்கப்பட்டதைவிடவும் வருமானம் குறைவடைந்துள்ளது.

நிதி அமைச்சின் கீழுள்ள மூன்று பிரதான நிறுவனங்களினூடாகவே நாட்டுக்கு வருமானம் கிடைக்கிறது. சுங்கத் திணைக்களத்தின் மூலம்தான் அதிகமான வருமானம் அரசுக்கு கிடைக்கிறது. அதில் பிரதானமாக வாகனங்கள் இறக்குமதியில் பாரிய வருமானம் கிடைக்கிறது. ஆனால், கடந்த ஒன்றரை வருடமாக வாகனங்கள் இறக்குமதி நிறுத்தப்பட்டுள்ளது. அந்நிய செலவாணியை ஈட்டிக்கொள்ளவே வாகன இறக்குமதி நிறுத்தப்பட்டது. கலால் திணைக்களத்தில் இரண்டாவதாக வருமானம் கிடைக்கப்பெறுகிறது. அதேபோன்று சுற்றலாத்துறை வீழ்ச்சியடைந்ததால் வருமானம் குறைவடைந்துள்ளது. அடுத்ததாக வற் வரி மூலம் அரசுக்கு வருமானம் கிடைத்தது. இவ்வருடம் வற் வரி, பாரியளவில் குறைவடைந்தது. ஒருநாள் நாட்டை முடக்கினாலும் வற் வரி எமக்கு கிடைப்பதில்லை.

வருமானங்கள் குறைவடைந்துள்ள போதும் செலவீனங்கள்; குறைவடையவில்லை. தடுப்பூசிகளை பெற்றுக்கொள்ள பாரியளவில் நிதி செலவிடப்படுகிறது. எமக்கு கிடைத்துள்ள 80 சதவீதமான தடுப்பூசிகள் நிதியை செலுத்தியே கொள்வனவுகள் இடம்பெற்றுள்ளன. அதேபோன்று ஒக்சிஜன் சுகாதார உபகரணங்களையும் கொள்வனவு செய்ய வேண்டியுள்ளது. சுகாதாரத்துறையினருக்கு மேலதிக கொடுப்பனவுகளையும் வழங்க வேண்டியுள்ளது. இதனால் நாம் புதிய மார்க்கத்தை நோக்கி பொருளாதாரத்தை நகர்த்த வேண்டியுள்ளது.

வெளிநாட்டு வருமான வழிமூலங்கள் முற்றாக இல்லாது போயுள்ளன. குறிப்பாக 05 பில்லியன் அமெரிக்க டொலர்கள் ஒவ்வொரு வருடமும் கிடைத்தன. அதேபோன்று வெளிநாட்டு தொழிலாளர்கள் மூலம் கிடைத்த வருமானங்களும் வீழ்ச்சிகண்டுள்ளன. ஏற்றுமதி மூலம் அடுத்தகட்டமாக வருமானத்தை நாம் ஈட்டியிருந்தோம். அந்த விடயத்தில் ஓரளவு திருப்தியடையக் கூடியதாக உள்ளது.

ஷம்ஸ் பாஹிம், சுப்பிரமணியம் நிஷாந்தன்

 

Wed, 09/08/2021 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை