பெண்கள் பணிக்கு திரும்ப காபூல் நகர நிர்வாகம் தடை

காபூல் நகரில் பணிபுரிந்த பெண்கள் வீட்டிலேயே இருக்கும்படி அந்த நகர நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.

பெண்களின் பணிகளுக்கு ஆண்களை அமர்த்த முடியாத பணிகளில் இருக்கும் பெண்களுக்கு மாத்திரம் பணிக்கு திரும்ப அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

1990களில் இருந்து மாறுபட்டு மிதவாத போக்குடன் ஆட்சி புரிவதாக வந்திருக்கும் தலிபான்கள் பெண்கள் மீதான கட்டுப்பாட்டை நாளுக்கு நாள் இறுக்கி வருகின்றனர்.

முன்னதாக கல்லூரிகளுக்கு மாணவிகள் மற்றும் பெண் ஆசிரியர்கள் திரும்புவதற்கு தலிபான்கள் கட்டுப்பாடு விதித்திருந்தனர்.

இந்நிலையில் மாநகரத்தில் தற்போது பெண்கள் வகித்த பதவிகளுக்கு ஆண்கள் நியமிக்கப்படுவார்கள் என்று தலைநகர் காபூலின் பதில் மேயர் குறிப்பிட்டுள்ளார்.

“இதனை விடவும் தாம் இறப்பது மேல்” என்று வெளியுறவு அமைச்சில் மூத்த அதிகாரி ஒருவராக பணியாற்றிய நிலையில் பதவி நீக்கம் செய்யப்பட்டிருக்கும் பெண் ஒருவர் குறிப்பிட்டுள்ளார்.

“ஒட்டுமொத்த திணைக்களத்திற்கும் நான் பொறுப்பாக இருந்தேன். என்னுடன் பல பெண்களும் பணியாற்றினார்கள்.

இப்போது நாம் எமது வேலைகளை இழந்திருக்கிறோம்” என்று அந்தப் பெண் ஏ.எப்.பி செய்தி நிறுவனத்திடம் தெரிவித்தார்.

எனினும் ஆப்கானின் புதிய ஆட்சியாளர்கள், பெண்கள் பணி புரிவதை தடுப்பது பற்றி உத்தியோகபூர்வ கொள்கை ஒன்றை வெளியிடவில்லை. ஆனால் தனிப்பட்ட நிர்வாகங்கள் இவ்வாறான கடுமையான முடிவுகளை எடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் கௌரவமான வேலை ஒன்றை பெறுவது கடினமாகும் என்று பல பெண்களும் அச்சமடைந்துள்ளனர்.

முன்னதாக கடந்த வெள்ளிக்கிழமை மகளிர் விவகார அமைச்சை இழுத்து மூடிய தலிபான்கள் அதற்கு பதில் தமது சிந்தனை அடிப்படையிலான மதக்கோட்பாட்டை அமுல்படுத்தும் வகையிலான அமைச்சு ஒன்றை உருவாக்கினர்.

Tue, 09/21/2021 - 08:06


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை