அரிசியை கட்டுப்பாட்டு விலைக்கு விற்காதோர் மீது நடவடிக்கை

அரிசியை கைப்பற்றி கட்டுப்பாட்டு விலையில் சந்தையில் விநியோகம்

வர்த்தக அமைச்சர் பந்துலவிற்கு ஜனாதிபதி கோட்டாபய அறிவுறுத்தல்

அரசாங்கத்தினால் விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாட்டு விலைக்கு அரிசியை விற்பனை செய்யாத பாரிய நெல் ஆலை உரிமையாளர்களின் அரிசிக் களஞ்சியசாலைகளிலுள்ள அரிசியை கைப்பற்றி கட்டுப்பாட்டு விலைக்கு சந்தைக்கு விநியோகிக்கும் நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷ வர்த்தக அமைச்சர் பந்துல குணவர்தனவிற்கு பணிப்புரை விடுத்துள்ளார்.

அரிசி விலை தொடர்பில் அமைச்சரவையில் மேற்கொள்ளப்பட்ட நீண்ட கலந்துரையாடலுக்குப் பின்னர் அங்கு முன்வைக்கப்பட்ட கருத்துக்களை கவனத்திற் கொண்டே ஜனாதிபதி மேற்படி பணிப்புரையை விடுத்துள்ளார்.

அரசாங்கம் அரிசிக்கு கட்டுப்பாட்டு விலையை விதித்துள்ள போதும் சந்தையில் அரிசியின் விலை குறைவடையவில்லையென்று அமைச்சர்கள் பலரும் ஜனாதிபதியின் கவனத்திற்கு கொண்டு வந்துள்ளனர்.

அது தொடர்பில் தெரிவித்துள்ள ஜனாதிபதி, நுகர்வோர் அதிகார சபை, அத்தியாவசிய  சேவை ஆணையாளர் நாயகம் மற்றும் உணவுத் திணைக்களம் ஆகியவற்றை இணைத்துக்கொண்டு அது தொடர்பில் உடனடியாக விசேட வேலைத்திட்டம் ஒன்றை தயாரிக்குமாறும் ஜனாதிபதி இதன்போது வர்த்தக அமைச்சர் பந்துல குணவர்தனவுக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.

அரிசி மற்றும் சீனி ஆகியவற்றுக்கு அரசாங்கம் உச்ச சில்லறை விலையை நிர்ணயித்து அதற்கான வர்த்தமானியை வெளியிட்டுள்ள நிலையிலும் சீனியின் விலை குறைந்தாலும் சந்தையில் அரிசியின் விலை எதிர்பார்த்தளவு குறைவடையவில்லையென மக்கள் தெரிவித்து வருகின்றனர்.

அரசாங்கம் வெள்ளை மற்றும் சிவப்பு பச்சை அரிசி ஒரு கிலோவுக்கான விலையை 95 ரூபாவாகவும் நாட்டரிசி ஒரு கிலோ வுக்கான விலையை 98 ரூபாவாகவும் சம்பா ஒரு கிலோவுக்கான விலையை 103 ரூபாவாகவும் கீரி சம்பா ஒரு கிலோவுக்கான விலையை 125 ரூபாயாகவும் கட்டுப்பாட்டு விலையை விதித்துள்ளது.

இத்தகைய நிலையில் அரசி சந்தையை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவதற்கு உடனடியாக தலையீடு செய்யுமாறும் அரசாங்கத்தின் கட்டுப்பாட்டு விலைக்கு அரிசியை விற்பனை செய்யாத பாரிய நெல் களஞ்சியசாலை உரிமையாளர்களிடமிருந்து கட்டுப்பாட்டு விலைக்கு அரிசியைப் பெற்று சந்தைக்கு விடுவிக்குமாறும் ஜனாதிபதி பணிப்புரை விடுத்துள்ளார்.(ஸ)

 

லோரன்ஸ் செல்வநாயகம்

Thu, 09/09/2021 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை