இலங்கைக்கு பூரண ஒத்துழைப்பை வழங்க ஐ.நா.செயலாளர் உறுதி

 ஜனாதிபதி கோட்டாபயவை சந்தித்த அன்டனியோ குட்டரெஸ் தெரிவிப்பு

 காணாமல் போனோர் குறித்து விரைவில் நடவடிக்கை எடுப்பதுடன் மரண சான்றிதழ்களை வழங்கவும் நடவடிக்கை

 நீண்டகாலமாக சிறையிலுள்ள தமிழ் இளைஞர்கள் பொதுமன்னிப்பில் விடுவிக்கப்படுவர்

 உள்ளகப் பொறிமுறையினூடாக பிரச்சினைகளை தீர்க்க பேச வருமாறு புலம்பெயர் தமிழர்களுக்கு ஜனாதிபதி அழைப்பு

 

 நீண்ட காலமாகத் தடுப்பிலுள்ள தமிழ் இளைஞர்கள் தொடர்பிலான சட்டச் செயற்பாடுகள் முடிவடைந்த பின்னர், நீண்ட காலம் தடுப்பில் இருந்ததைக் கருத்திற்கொண்டு, பொது மன்னிப்பின் பேரில் அவர்கள் விடுவிக்கப்படுவார்கள் என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷ ஐ.நா. பொதுச் செயலாளரிடம் தெரிவித்தார்.

நியூயோர்க்கிலுள்ள ஐக்கிய நாடுகள் சபைத் தலைமையகத்தில், (19) நடைபெற்ற ஜனாதிபதிக்கும் ஐ.நா பொதுச் செயலாளருக்குமிடையிலான விசேட சந்திப்பின் போதே, அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

அத்துடன் காணாமற்போனோர் தொடர்பில், அரசாங்கம் என்ற ரீதியில் எடுக்கக்கூடிய நடவடிக்கைகளை விரைவில் முன்னெடுப்பதாகவும் மரணச் சான்றிதழ்களை வழங்கும் நடவடிக்கைகளை விரைவுபடுத்துவதாகவும், பொதுச் செயலாளரிடம், தெரிவித்த ஜனாதிபதி, உள்ளகப் பொறிமுறையினூடாகப் பிரச்சினைகளைத் தீர்த்துக்கொள்வதற்கான பேச்சுவார்த்தைக்கு வருமாறு, புலம்பெயர் தமிழர்களுக்கும் அழைப்பு விடுத்தார்.

இதே வேளை, இனங்களுக்கிடையில் ஒற்றுமையை பலப்படுத்திக்கொண்டு முன்னோக்கி நகர்வதற்கான முழுமையான ஒத்துழைப்பை, மிகவும் நேர்மறையான முறையில் ஐக்கிய நாடுகள் சபை இலங்கைக்கு வழங்குமென ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலாளர் அன்டனியோ குட்டரெஸ் (Antonio Guterres) ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷவிடம் தெரிவித்துள்ளார்.

இதன்போது, ஐக்கிய நாடுகள் சபையுடன் எப்போதும் மிக நெருக்கமாகப் பணியாற்றத் தயாரென எடுத்துரைத்த ஜனாதிபதி, நாட்டுக்குள் மீண்டும் பிரிவினைவாதம் ஏற்படப்போவதில்லையென்பதைத் தன்னால் உறுதிப்படத் தெரிவிக்க முடியுமென்ற போதிலும், மதவாதத் தீவிரவாதம் தொடர்பில், அரசாங்கம் என்ற ரீதியில் இலங்கை போன்று ஏனைய நாடுகளும் அவதானமாக இருக்க வேண்டுமென்று எடுத்துரைத்தார்.

----------------------------(முழுமையான செய்தியை 02ம் பக்கம் பார்க்கவும்)

 

Tue, 09/21/2021 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை