ஹெய்டி ஜனாதிபதி கொலையில் பிரதமருக்கு எதிராக குற்றச்சாட்டு

ஹெய்டி ஜனாதிபதி ஜொவேனல் மொயிஸின் கொலையில் பிரதமர் ஏரியல் ஹென்றிக்கு தொடர்பு இருப்பதாக குற்றம்சாட்டிய அந்நாட்டின் தலைமை அரச வழக்குத் தொடுநரை பிரதமர் நீக்கியதை அடுத்து அரசியல் குழப்பம் தீவிரம் அடைந்துள்ளது.

வழக்குத் தொடுநர் பெட் போர்ட் கிளோடேவை நீக்கியது ஹெய்டி அரசின் உயர் மட்டத்தில் மோதலை ஏற்படுத்தியுள்ளது. ஜனாதிபதி மொயிஸ் இரண்டு மாதங்களுக்கு முன்னர் அவரது இல்லத்தில் வைத்து கொலைக் கும்பல் ஒன்றினால் சுட்டுக் கொல்லப்பட்டார். இந்நிலையில் இந்த வழக்கில் பிரதமருக்கு உள்ள தொடர்பு பற்றிய குற்றச்சாட்டை பதிவு செய்யும்படி தலைமை வழக்குத் தொடுநர் நீதிபதியிடம் கேட்டுக் கொண்ட நிலையில் சில மணி நேரத்தின் பின் கடந்த செவ்வாய்க்கிழமை அவர் பதவி நீக்கப்பட்டுள்ளார். எனினும் தாம் பதவியில் நீடித்திருப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார். ஹெய்டியின் 1987 அரசியலமைப்பின்படி வழக்குத் தொடுநரை நியமிப்பது மற்றும் பதவி நீக்கம் செய்யும் அதிகாரம் ஜனாதிபதியிடமே உள்ளது. தற்போது அந்தப் பதவி காலியாக இருப்பதால் பிரதமரின் இந்த உத்தரவு செல்லுபடியாகுமா என்று தெரியவில்லை. இதனிடையே கியோடேவுக்கு கூடுதல் பாதுகாப்பு வழங்கும்படி நீதித்துறை அமைச்சர் உத்தரவிட்டுள்ளார்.

ஜனாதிபதி கொலை செய்யப்படுவதற்கு முன்னதாக கொலையில் சந்தேகிக்கப்படும் நபருடன் பிரதமர் ஹென்றி பல முறை பேசியிருப்பது கண்டறியப்பட்டது. இதனை அடுத்து பிரதமர் நாட்டை விட்டு வெளியேற தடை விதிக்கப்பட்டுள்ளது.

கொலையில் சந்தேகிக்கப்படும் பேடியோ என்பவரது கைபேசி சம்பவம் நடந்த இடத்துக்கு அருகில் இருந்தது கண்டறியப்பட்டுள்ளது. கொலை நடந்த பின்னர் அவர் பிரதமர் ஹென்றியுடன இரண்டு முறை தொலைபேசியில் பேசியிருப்பதற்கான ஆவணங்களும் கிடைத்துள்ளன.

Thu, 09/16/2021 - 10:08


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை