வடகொரியா புதிய நீண்ட தூர க்ரூஸ் ஏவுகணைச் சோதனை

ஜப்பானின் பெரும்பகுதியை தாக்கக் கூடிய திறன் கொண்ட புதிய நீண்ட க்ரூஸ் தூர ஏவுணை ஒன்றை வட கொரியா சோதித்துள்ளது.

கடந்த வார இறுதியில் இடம்பெற்றிருக்கும் இந்த சோதனையில் அந்த ஏவுகணை 1,500 கி.மீ வரை பாய்ந்ததாக வட கொரிய அரச செய்தி நிறுவனமான கே.சி.என்.ஏ தெரிவித்துள்ளது.

நாட்டில் உணவு பற்றாக்குறை மற்றும் பொருளாதார நெருக்கடி நிலவுகின்றபோதும் வட கொரியா தொடர்ந்து ஆயுதங்களை மேம்படுத்தும் திறனை பெற்றிருப்பதாக இந்த சோதனை காட்டுகிறது.

இந்த புதிய ஏவுகணை சோதனை சர்வதேச சமூகம் மற்றும் அண்டை நாடான ஜப்பானுக்கு அச்சுறுத்தலாக உள்ளது என்று எச்சரித்திருக்கும் அமெரிக்க இராணுவம், இது “குறிப்பிடும்படியான அவதானத்திற்குறியது” என்று கூறியது.

தங்களின் கூட்டாளிகளான ஜப்பான் மற்றும் தென் கொரியாவை பாதுகாப்பதில் தாங்கள் உறுதியாக இருப்பதாகவும் அமெரிக்க இராணுவம் கூறியுள்ளது. வட கொரியா சோதனை செய்த ஏவுகணை குறித்து, அமெரிக்க உளவு அமைப்புகளோடு இணைந்து ஆய்வு செய்து வருவதாக தென் கொரியாவின் யோன்ஹப் செய்தி முகாமையில் செய்தி வெளியாகியுள்ளது.

வட கொரியா அணு ஆயுதங்கள் பயன்பாட்டை தடை செய்வது தொடர்பாக அமெரிக்கா, தென் கொரியா, ஜப்பான் நாடுகளைச் சேர்ந்த உயர் அதிகாரிகள் இந்த வாரம் சந்தித்து பேச உள்ளதும் குறிப்பிடத்தக்கது. ஏவுதள வாகனத்தில் இருந்து ஏவுகணை வீசப்படுவது மற்றும் அது பாய்ந்து செல்லும் படங்கள் வட கொரியாவின் ரொடொங் சின்முன் பத்திரிகையில் வெளியாகியுள்ளன.

ஏவுகணைகள் மிக முக்கியத்துவம் வாய்ந்த மூலோபாய ஆயுதம் ஒன்றாக உள்ளது என்று வட கொரிய செய்தி நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.

கடந்த சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் இடம்பெற்ற இந்த சோதனையில் ஏவுகணைகள் வட கொரிய கடல் எல்லைக்குள் விழுவதற்கு முன்னர் அவைகளின் இலக்குகளை தாக்கியதாக அந்த செய்தியில் மேலும் கூறப்பட்டுள்ளது.

இது வட கொரியாவின் அணு ஆயுதத்தை ஏந்திச் செல்லக்கூடிய முதலாவது நீண்ட தூர க்ரூஸ் ஏவுகணை என்று அந்நாட்டு ஆய்வாளர் அகிட் பன்டா குறிப்பிட்டுள்ளார்.

கண்டம் விட்டு கண்டம் பாயக்கூடிய ஏவுகணைகளை சோதிப்பதற்கு வட கொரியாவுக்கு ஐ.நா பாதுகாப்புச் சபை தடை விதித்தபோதும் இது போன்ற க்ரூஸ் ஏவுகணைகளுக்கு அந்தத் தடை இல்லை.

கண்டம் விட்டு கண்டம் பாயக்கூடிய ஏவுகணைகள் க்ரூஸ் ஏவுகணைகளை விட மிகப் பெரியதும் சக்திவாய்ந்ததுமான ஆயுதங்களை நீண்டதூரம் வேகமாக எடுத்துச் செல்லும் திறன் கொண்டதாக இருப்பதாக பாதுகாப்புச் சபை கருதுகிறது.

கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணை ரொக்கெட் ஒன்றின் சக்தியுடன் வளைவாக பறப்பதோடு க்ரூஸ் ஏவுகணை ஜெட் இஞ்சினின் சக்தியுடன் தாழ்வாக பறக்கும்.

Tue, 09/14/2021 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை