‘பூஸ்டர்’ தடுப்பூசியை ஆண்டு இறுதி வரை நிறுத்த அழுத்தம்

ஏழைய நாடுகளுக்கான தடுப்பு மருந்து குறைப்பு

அதிக அளவு கொரோனா தடுப்பூசிகளை வைத்திருக்கும் செல்வந்த நாடுகள் பூஸ்டர் எனப்படும் மூன்றாவது முறை கொரோனா தடுப்பூசி வழங்கும் திட்டத்தை அடுத்த ஆண்டு வரை ஒத்திவைக்கும்படி உலக சுகாதார அமைப்பு கேட்டுக்கொண்டுள்ளது.

‘மீதமுள்ள தடுப்பூசிகளால் உலகில் ஏழை மக்கள் திருப்தி அடைய வேண்டும் என்று மருந்து உற்பத்தி நிறுவனங்கள் மற்றும் தடுப்பு மருந்து விநியோகத்தை கட்டுப்படுத்தும் நாடுகள் நினைப்பது குறித்து நான் அமைதி காக்கப்போவதில்லை’ என்று உலக சுகாதார அமைப்பின் தலைவர் டெட்ரோஸ் அதனொம் கெப்ரியேசுஸ் தெரிவித்துள்ளார்.

குறைந்த மற்றும் குறைந்த நடுத்தர வருமானம் உடைய நாடுகள் இரண்டாவது அல்லது மூன்றாம் தர முக்கியத்துவம் கொண்ட நாடுகள் அல்ல என்றும் அவர் கூறினார்.

ஏழை, வளரும் நாடுகளின் சுகாதாரப் பணியாளர்களும், மூத்த குடிமக்களும் மற்ற நாட்டவரைப் போலவே தடுப்பூசியை சமவாய்ப்புடன் பெறத் தகுதியானவர்களே. ஏற்கனவே நான் கடந்த மாதம் வளர்ந்த நாடுகள் பூஸ்டர் தடுப்பூசியை வழங்குவதை சற்றே நிறுத்தி வைக்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தேன். தற்போது மீண்டும் அதையே வலியுறுத்துகிறேன் என்றும் அவர் குறிப்பிட்டார்.

சர்வதேச அளவில் இதுவரை வழங்கப்பட்டிருக்கும் 5.5 மில்லியன் தடுப்பூசிகளில் சுமார் 80 வீதமானது அதிக வருமானம் உடைய நாடுகளே பயன்படுத்தி இருப்பதாக டெட்ரோஸ் சுட்டிக்காட்டினார்.

இவ்வாண்டு இறுதிக்குள் ஒவ்வொரு நாட்டிலும் குறைந்தது 40 வீதத்தினர் தடுப்பூசி போட்டிருக்க வேண்டும் என்பது உலக சுகாதார அமைப்பின் இலக்காக உள்ளது.

எனினும் உலகின் ஏழை நாடுகளுக்கு இவ்வாண்டு கொடுப்பதாக உறுதியளிக்கப்பட்டிருந்த கொவிட்-19 தடுப்பு மருந்துகள் முழுமையாக வழங்கப்படமாட்டாது என்று உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.

உலகளாவிய கொவெக்ஸ் திட்டத்தின் மூலம், ஏழை நாடுகளுக்கு விநியோகிக்கப்படவிருந்த தடுப்புமருந்துகளில் சுமார் 30 வீதம் குறைக்கப்பட்டுள்ளது.

இரண்டு பில்லியன் முறை பயன்படுத்தத் தேவையான தடுப்புமருந்துகளை வழங்குவதற்கு ஆரம்பத்தில் உறுதியளிக்கப்பட்டது. அது, ஒன்றரை பில்லியனுக்கு இப்போது குறைக்கப்பட்டுள்ளது.

கொவெக்ஸ் திட்டத்தில் நிறைய வாக்குறுதிகள் வழங்கப்பட்டிருந்தன. ஆனால் அவற்றில் சில மட்டுமே செயல்படுத்தப்பட்டன என்று உலக சுகாதார அமைப்பின் தலைவர் டெட்ரோஸ் கூறினார். 

Fri, 09/10/2021 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை