பஞ்சிர் பள்ளத்தாக்கை தலிபான்கள் சுற்றிவளைப்பு: தொடர்ந்து மோதல்

புதிய அரசு அமைப்பதில் இழுபறி

ஆப்கானிஸ்தானில் தலிபான் எதிர்ப்பாளர்களின் கட்டுப்பாட்டில் இருக்கும் கடைசி மாகாணமான பஞ்சிரில் தலிபான்கள் மற்றும் எதிர்ப்புப் போராளிகளுக்கு இடையே மோதல் தீவிரம் அடைந்துள்ளது.

கபிசா மாகாணம் மற்றும் பஞ்சிருக்கு இடையிலான எல்லைப் பகுதியாக உள்ள தர்பண்ட் உச்சியை தலிபான்கள் அடைந்தபோதும் அவர்கள் பின்வாங்கச் செய்யப்பட்டதாக ஆப்கான் எதிர்ப்பாளர்களின் தேசிய எதிர்ப்பு முன்னணி தெரிவித்துள்ளது.

‘ஆப்கான் கோட்டையில் பாதுகாப்பை முறியடிக்க முடியாது’ என்று அந்த எதிர்ப்பு முன்னணியின் பேச்சாளர் பாஹிம் டஷ்டி, ட்விட்டர் பதிவு ஒன்றில் குறிப்பிட்டுள்ளார்.

பஞ்ஷிரில் மோதல் நீடிப்பதாக தலிபான் தரப்பினர் குறிப்பிட்டுள்ளனர். எனினும் தலைநகர் பசரக் மற்றும் மாகாண ஆளுநரின் வளாகத்திற்கான வீதியில் கண்ணிவெடிகள் வைக்கப்பட்டிருப்பதால் முன்னேற்றம் மந்தமாக இருப்பதாக குறிப்பிட்டுள்ளனர். கண்ணிவெடிகளை அகற்றுவது மற்றும் தாக்குதல் இரண்டும் ஒரே நேரத்தில் இடம்பெற்று வருவதாக தலிபான்கள் குறிப்பிட்டுள்ளது.

கடந்த வாரம் ஆப்கானில் இருந்து அமெரிக்க துருப்புகள் முற்றாக வெளியேறிய நிலையில், ஆப்கானில் புதிய அரசு ஒன்றை அமைப்பதற்கு முன் பஞ்சிர் கிளர்ச்சியாளர்களை முறியடிப்பதில் தலிபான்கள் தீவிரம் காட்டியுள்ளனர்.

எனினும் பஞ்சிர் பள்ளத்தாக்கு சோவியட் ஆக்கிரமிப்பின்போது சுமார் ஒரு தசாப்தம் தாக்குப்பிடித்ததோடு 1996 தொடக்கம் 2001 வரை தலிபான்களின் முந்தைய ஆட்சியின்போது தமது நிலையை தக்கவைத்துக்கொண்டமை குறிப்பிடத்தக்கது.

தலிபான் எதிர்ப்பு போராளிகள் மற்றும் முன்னாள் ஆப்கான் பாதுகாப்பு படையை ஒன்றிணைத்ததாக தேசிய எதிர்ப்பு முன்னணி உள்ளது. ஒரு குறுகலான பள்ளத்தாக்கினால் பாதுகாக்கப்பட்ட, காபுலில் இருந்து 80 கிலோமீற்றர் தொலைவில் இருக்கும் இந்தப் பள்ளத்தாக்கில் குறிப்பிடத்தக்க படைப்பலமும் ஆயுதங்களும் இருப்பதாக கணிக்கப்பட்டுள்ளது.

இந்த பள்ளத்தாக்கு தலிபான்களிடம் வீழ்ந்ததாக வாதந்தி பரவியதால் தலைநகர் காபுலில் சனிக்கிழமை இரவு வானை நோக்கி துப்பாக்கிச்சூடு நடத்தி கொண்டாட்டங்கள் இடம்பெற்றுள்ளன. இவ்வாறான துப்பாக்கிச் சூடுகளில் இருவர் கொல்லப்பட்டு மேலும் 20 பேர் காயமடைந்திருப்பதாக காபுல் மருத்துவமனை குறிப்பிட்டுள்ளது. வானை நோக்கி சுடும் கொண்டாட்டத்தை நிறுத்தும்படி போராளிகளுக்கு தலிபான்கள் அறிவுறுத்தியுள்ளனர்.

‘வானை நோக்கி சுடுவதற்கு பதில் இறைவனுக்கு நன்றி செலுத்துங்கள்’ என்று தலிபான் பேச்சாளர் சபிஹுல்லா முஜாஹித் குறிப்பிட்டுள்ளார். இவர் தலிபான்களின் புதிய அரசில் தொடர்பாடல் அமைச்சராக நியமிக்கப்படவுள்ளார் என்று கூறப்படுகிறது.

எனினும் தேசிய எதிர்ப்பு முன்னணி ஆபத்தான நிலையில் இருப்பதாக கொல்லப்பட்ட தலிபான் எதிர்ப்பு போராளியான அஹமது ஷா மசூதின் மகன் அஹமது மசூத் மற்றும் முன்னாள் துணை ஜனாதிபதி அம்ருல்லா சலே ஒப்புக்கொண்டுள்ளனர்.

‘நாம் தாக்குதலுக்கு முகம்கொடுத்திருப்பதோடு நிலைமை மோசமாக உள்ளது’ என்று சலே, வீடியே அறிவித்தல் ஒன்றில் குறிப்பிட்டுள்ளார். எதிர்ப்பு தொடர்வதாகவும் அது தொடர்ந்து நீடிக்கும் என்றும் உறுதி அளித்தார்.

இங்குள்ள முக்கிய மாவட்டமான பர்யான் கடந்த சில நாட்களில் இரு தரப்பிடமும் பல தடவைகள் கைமாறி இருப்பதாக தலிபான்கள் மற்றும் எதிர்ப்பாளர்களின் ட்விட்டர் பதிவுகளில் இருந்து தெரியவருகிறது. எனினும் இந்தத் தகவல்களை சுயாதீனமாக உறுதி செய்ய முடியாதுள்ளது. இதேவேளை ஆப்கானிஸ்தானில் தங்களது தலைமையிலான புதிய அரசை அமைப்பதை தலிபான்கள் இரண்டாவது முறையாக ஒத்திவைத்துள்ளனர்.

புதிய அரசு குறித்த அறிவிப்பு சனிக்கிழமை வெளியிடப்படும் என அறிவித்திருந்த நிலையில், தற்போது அடுத்த வாரத்துக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. தலிபான்கள் செய்தித் தொடர்பாளர் சபிஹுல்லா முஜாஹித் இதுகுறித்து சனிக்கிழமை தெரிவிக்கையில், “புதிய அரசு மற்றும் அமைச்சரவை குறித்த அறிவிப்பு அடுத்த வாரம் வெளியிடப்படும்” என்றார். இதுதவிர அவர் வேறு தகவல்களைப் பகிரவில்லை.

கடந்த ஓகஸ்ட் 15இல் ஆப்கானிஸ்தானைக் கைப்பற்றியதிலிருந்து புதிய அரசு அமைப்பதை தலிபான்கள் இரண்டாவது முறையாக ஒத்திவைத்துள்ளனர்.

Mon, 09/06/2021 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை