கட்டார் வெளியுறவு அமைச்சர் ஆப்கானிஸ்தானுக்கு பயணம்

ஆப்கானிஸ்தானின் தேசிய நல்லிணக்கத்தில் தலிபான் அரசாங்கம் அனைத்துத் தரப்பினரையும் ஈடுபடுத்த வேண்டும் என்று கட்டார் கேட்டுக்கொண்டுள்ளது.

தலைநகர் காபூலுக்குச் சென்றிருந்த கட்டார் வெளியுறவு அமைச்சர் முகமது பின் அப்துல்-ரஹ்மான் அல்-தனி அந்தக் கோரிக்கையை முன்வைத்தார்.

கடந்த ஞாயிற்றுக்கிழமை அவர் ஆப்கானியப் பிரதமர் முகமது ஹசன் அக்குண்டையும் ஏனைய அமைச்சரவை உறுப்பினர்களையும் சந்தித்தார்.

அமெரிக்க மத்திய புலனாய்வுப் பிரிவின், பயங்கரவாதத்துக்காகத் தேடப்படுவோர் பட்டியலில் உள்ள ஆப்கானிய உள்துறை அமைச்சர் சிராஜுதீன் ஹக்கானியும் அந்தச் சந்திப்பில் கலந்துகொண்டார்.

இருதரப்பு உறவுகள், மனிதாபிமான உதவி ஆகியவை குறித்துச் சந்திப்பில் பேசப்பட்டது.

இதன்போது அவர் ஆப்கான் முன்னாள் ஜனாதிபதி ஹமீத் கர்சாயி மற்றும் தேசிய நல்லிணக்க சபை தலைவர் அப்துல்லா அப்துல்லாவையும் சந்தித்து பேசினார்.

இந்நிலையில், ஆப்கானிஸ்தானுக்கு நிவாரண உதவி வழங்குவது குறித்துப் பேச, சர்வதேச நன்கொடையாளர்கள் நேற்று ஜெனிவாவில் சந்தித்தனர். சீனாவும் பாகிஸ்தானும் ஏற்கனவே நிவாரண உதவி அளித்துள்ளன.

ஆனால் மனித உரிமைகளுக்கான உத்தரவாதம் கிடைக்கும் வரை, 10 பில்லியன் டொலர் மதிக்கத்தக்க ஆப்கானிஸ்தானின் வெளிநாட்டுச் சொத்துகளை அமெரிக்கா முடக்கியுள்ளது. 

Tue, 09/14/2021 - 09:42


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை