இலங்கை மீது ஐ.நா பேரவை அழுத்தங்களை பிரயோகிக்க நல்லாட்சி அரசாங்கமே காரணம்

இலங்கை மனித உரிமை ஆணைக்குழு முன்னாள் தலைவர்

நல்லாட்சி அரசாங்கத்தின் காலத்தில் நிறைவேற்றப்பட்ட பிரேரணை காரணமாக ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் இலங்கைக்கு எதிராக அழுத்தங்கள் பிரயோகிக்கப்படுவதாக இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் முன்னாள் தலைவர் பேராசிரியர் பிரதீபா மாஹானாம ஹேவா தெரிவித்துள்ளார்.

கொழும்பில் நேற்று செவ்வாய்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார். மனித உரிமைகள் பேரவையின் ஆணையாளரால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கை எவரேனும் ஒருவரால் அவருக்கு எழுதி வழங்கப்பட்ட அறிக்கையாக இருக்கக்கூடும். மனித உரிமைகள் ஆணைக்குழு இலங்கைக்கு எதிராக தொடர்ந்து இவ்வாறு செயல்படுமானால் அது கேளிக்கைக்குரிய விடயமாகவே இருக்கும்.

இலங்கை என்பது ஐ.நாவில் அங்கம் வகிக்கும் சுயாதீன நாடாகும். இலங்கையின் சுயாதீனத்தின் அதிகாரம் பாராளுமன்றத்திற்குதான் உள்ளது. தேசிய ரீதியான பிரச்சினைக்கு தேசிய பொறிமுறையில் தீர்வுகாண முடியாது போனால் மாத்திரமே வேறு வழிகள் உள்ளன.

நாட்டில் அவரசால சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ளமை தொடர்பில் ஐ.நாவால் கேள்வியெழுப்ப முடியாது. நாட்டில் பதுக்கிவைக்கப்பட்டுள்ள உணவுகளை வெளிகொண்டுவரவே அவசரகால சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளது. பாராளுமன்றத்தில் அனுமதி பெறப்பட்டுதான் அவசரகால சட்டம் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.

1978ஆம் ஆண்டு அரசியலமைப்பின் பிரகாரம் பொது மன்னிப்பு வழங்கும் அதிகாரம் ஜனாதிபதிக்குள்ளது. அதன் பிரகாரமே பொது மன்னிப்புகள் வழங்கப்படுகிறது. பராக் ஒபாமா மற்றும் ட்ரம்ப் போன்றோரும் யுத்தக்குற்றச்சாட்டு உள்ளவர்களுக்கு பொது மன்னிப்பு வழங்கிய சந்தர்ப்பங்களில் எவரும் கேள்வி கேட்கவில்லை.

பயங்கரவாதத் தடைச் சட்டம் பற்றி பேசுகின்றனர். பயங்கரவாதத் தடை சட்டத்தின் கீழ்தான் இலங்கையில் பயங்கரவாதம் ஒழிக்கப்பட்டது என்பதையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

நல்லாட்சி அரசாங்கத்தின் காலத்தில் நிறைவேற்றப்பட்ட 30/1 கீழ் பிரேரணை காரணமாக ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் இலங்கைக்கு எதிராக அழுத்தங்கள் பிரயோகிக்கப்படுகின்றன. அதற்கான இழப்பீட்டை இந்த அரசாங்கம் செலுத்த வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது” என்றும் அவர் கூறியுள்ளார்.

சுப்பிரமணியம் நிஷாந்தன்

Wed, 09/15/2021 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை