விண்வெளிக்கு சென்ற சுற்றுலா பயணிகள் பூமிக்குத் திரும்பினர்

ஸ்பேஸ் எக்ஸ் விண்கலத்தில் சென்றிருந்த 4 சுற்றுலாப்பயணிகளும் பாதுகாப்பாக பூமிக்குத் திரும்பியுள்ளனர்.

ஸ்பேஸ் எக்ஸ் ட்ரகன் விண்கலம், 4 பெரிய வான்குடைகளின் உதவியுடன் புளோரிடாவின் கரைக்கு அப்பால் உள்ள அட்லாண்டிக் கடலில் இறங்கியது.

அந்த விண்கலம், உடனடியாக ஸ்பேஸ் எக்ஸ் கப்பலால் மீட்கப்பட்டு அதன் உள்ளேயிருந்த நால்வரும் புன்னகையுடன் வெளியேறினர்.

யார் வேண்டுமானாலும் விண்வெளிக்குச் செல்லலாம் என்பதை நிரூபிப்பதே இந்தப் பயணத்தின் நோக்கம் என்று தெரிவிக்கப்பட்டது.

சர்வதேச விண்வெளி நிலையத்துக்கு அப்பால் சுமார் 575 கிலோமீற்றர் உயரத்துக்கு விண்கலம் சென்றது. பூமியைத் தினமும் 15 முறைக்கு மேல் அது சுற்றியது.

38 வயது ஜேரட் ஐசக்மேன் அந்தப் பயணத்திற்காகப் பல மில்லியன் டொலர் செலவு செய்துள்ளதாகக் கூறப்படுகிறது. போட்டி மூலம் தெரிவுசெய்யப்பட்ட மூவரை ஐசக்மேன் தம்முடன் அழைத்துச் சென்றார். விண்வெளிப் பயணத்திற்காக நால்வரும் சுமார் 6 மாதம் பயிற்சி செய்தனர்.

விண்வெளி சுற்றுப்பயணத்தில் ஆர்வம் காட்டுவோரின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக ஸ்பேஸ் எக்ஸ் தெரிவித்தது. அதன் அடுத்த பயணம் அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் திட்டமிடப்பட்டுள்ளது.

Mon, 09/20/2021 - 08:34


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை