பிரிட்டனுடனான பிரான்ஸின் பாதுகாப்புச் சந்திப்பு இரத்து

அமெரிக்கா, பிரிட்டன் மற்றும் அவுஸ்திரேலியாவுக்கு இடையே இடம்பெற்ற புதிய பாதுகாப்பு உடன்படிக்கை தொடர்பான முறுகல் காரணமாக பிரிட்டன் பாதுகாப்பு அமைச்சருடனான சந்திப்பை பிரான்ஸ் பாதுகாப்பு அமைச்சர் இரத்துச் செய்துள்ளார்.

ஆக்கஸ் என்ற இந்த உடன்படிக்கையில் அணுசக்தி நீர்மூழ்கிக் கப்பல் கட்ட அவுஸ்திரேலியா ஒப்பந்தம் செய்து கொண்டதால் அந்த நாடு பிரான்ஸுடன் செய்துகொண்ட ஒப்பந்தம் கைவிடப்பட்டது தொடர்பிலேயே பிரான்ஸ் ஆத்திரம் அடைந்துள்ளது.

அந்த உடன்படிக்கை குறித்து பிரான்ஸ் கவலைப்படத் தேவையில்லை என்று பிரிட்டன் பிரதமர் பொரிஸ் ஜோன்சன் வலியுறுத்தியுள்ளார்.

எனினும் பிரான்ஸ் பாதுகாப்பு அமைச்சர் பிளோரன்ஸ் பார்லி இந்த வாரம் லண்டனில் பிரிட்டன் பாதுகாப்பு அமைச்சர் பென் வொல்லஸுடன் ஏற்படுத்தவிருந்த சந்திப்பை இரத்துச் செய்துள்ளார்.

பிரிட்டனுக்கான பிரான்ஸ் முன்னாள் தூதுவரும் இந்த இரண்டு நாள் பேச்சுவார்த்தையின் இணைத் தலைவராகவும் இருந்த லோர்ட் ரிக்கட்ஸ் இந்த சந்திப்பு ஒத்திவைக்கப்பட்டிருப்பதாக உறுதி செய்தார்.

கடந்த வாரம் ஏற்படுத்தப்பட்ட ஆக்கஸ் உடன்படிக்கை, சீனாவின் செல்வாக்கை எதிர்கொள்ளச் செய்து கொண்ட ஒன்றாக பரவலாகப் பார்க்கப்படுகிறது. எனினும் இந்த உடன்படிக்கையால் 12 நீர்மூழ்கிக் கப்பல்களை உருவாக்கு 2016 ஆம் ஆண்டு அவுஸ்திரேலியாவுடன் செய்துகொண்ட 37 பில்லியன் டொலர் பெறுமதி மிக்க பிரான்ஸின் ஒப்பந்தம் கைவிடப்பட்டுள்ளது.

‘இதனை முதுகில் குத்தும் செயல்’ என பிரான்ஸ் வெளியுறவு அமைச்சர் சாடி இருந்தார். கூட்டணி மற்றும் நட்பு நாடுகளுக்கு இடையே எதிர்பார்க்க முடியாத நடத்தை இதுவென்றும் அவர் குறிப்பிட்டிருந்தார். இந்நிலையில் அமெரிக்க மற்றும் அவுஸ்திரேலியாவுக்கான தமது தூதுவர்களையும் திரும்ப அழைத்துக் கொள்ள பிரான்ஸ் ஜனாதிபதி எம்மானுவேல் மெக்ரோன் தீர்மானித்தார்.

Tue, 09/21/2021 - 12:02


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை