காசாவில் இஸ்ரேல் துப்பாக்கி சூட்டில் பலஸ்தீனர் உயிரிழப்பு

காசா பகுதிக்கான எல்லைக்கு அருகில் இஸ்ரேல் படையினருடன் கடந்த வியாழக்கிழமை இரவு இடம்பெற்ற மோதலில் ஒரு பலஸ்தீனர் கொல்லப்பட்டு குறைந்தது 15 பேர் காயமடைந்திருப்பதாக காசா சுகாதார அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

வடக்கு ஜபலியா பகுதியில் வயிற்றில் துப்பாக்கி குண்டு பாய்ந்த 26 வயது இளைஞர் கொல்லப்பட்டிருப்பதோடு மேலும் ஒருவர் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருவதாக அது குறிப்பிட்டுள்ளது.

காசாவின் பல பகுதிகளிலும் இவ்வாறான ஆர்ப்பாட்டங்கள் இடம்பெறுவதாகவும் இஸ்ரேலிய துருப்புகளுக்கு எதிராக எரி குண்டுகள் பயன்படுத்தப்படுவதாகவும் ஏ.எப்.பி செய்தி நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.

காசா மீது 15 ஆண்டுகளுக்கு மேல் நீடிக்கும் கட்டுப்பாட்டுக்கு எதிராக காசாவின் பல தரப்புகளும் ஆர்ப்பாட்டங்களுக்கு அழைப்பு விடுத்துள்ளன.

முன்னதாக கடந்த ஓகஸ்ட் 21 ஆம் திகதி இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தின்போது இஸ்ரேலின் ஸ்னைப்பர் தாக்குதலில் பலஸ்தீனர் ஒருவர் கொல்லப்பட்டதோடு 40க்கும் அதிகமானவர்கள் காயமடைந்தனர்.

காசாவில் இஸ்ரேலின் முடக்கத்தை முடிவுக்குக் கொண்டுவருவது மற்றும் யூத தேசம் உருவாக்கப்படும்போது அங்கிருந்து தப்பியோடியவர்கள் அல்லது வெளியேற்றப்பட்டவர்களை மீண்டும் தமது சொந்த நிலத்திற்கு திரும்புவதற்கான உரிமையைக் கோரும் இந்த பேரணி 2018 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட நிலையில், அது தற்போது மீண்டும் தீவிரம் அடைந்துள்ளது.

Sat, 09/04/2021 - 09:04


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை