ஆக்கஸ் உடன்படிக்கை: அமெரிக்கா, ஆஸி. 'பொய் கூறியதாக' பிரான்ஸ் குற்றச்சாட்டு

தூதுவர்களும் திரும்ப அழைப்பு

அமெரிக்கா மற்றும் அவுஸ்திரேலியாவுக்கான தமது தூதுவர்களை பிரான்ஸ் திரும்ப அழைத்திருக்கும் நிலையில் அந்த இரு நாடுகளும் புதிய பாதுகாப்பு உடன்படிக்கை பற்றி தமக்கு பொய் கூறியதாக பிரான்ஸ் வெளியுறவு அமைச்சர் ஜீன்-யெவஸ் லே ட்ரியன் குற்றம்சாட்டியுள்ளார்.

இந்த நாடுகள் இரட்டை நிலைப்பாட்டை கொண்டிருப்பதாகவும், பெரும் நம்பிக்கை மீறல் மற்றும் அவமதிப்பைச் செய்திருப்பதாகவும் அவர் சாடினார்.

அமெரிக்கா, பிரிட்டன் மற்றும் பிரான்ஸ் இடையிலே அண்மையில் இடம்பெற்ற ஆக்கஸ் என அழைக்கப்படும் புதிய பாதுகாப்பு உடன்படிக்கையால், அவுஸ்திரேலியாவுடன் பிரான்ஸ் செய்து கொண்ட பல பில்லியன் டொலர் பெறுமதியான ஒப்பந்தம் ஒன்று கைவிடப்பட்டுள்ளது.

எனினும் நாட்டின் தேசிய நலனைக் கருத்தில் கொண்டு செயற்பட்டதாக அவுஸ்திரேலிய பிரதமர் ஸ்கொட் மொரிஸன் விளக்கம் அளித்துள்ளார்.

‘12 நீர்மூழ்கிக் கப்பல்களை கட்டுவது தொடர்பில் 2016 ஆம் ஆண்டு பிரான்ஸுடன் செய்து கொள்ளப்பட்ட 37 பில்லியன் டொலர் பெறுமதியான ஒப்பந்தம், எமது மூலோபாய நலன்களை பூர்த்தி செய்யப்போவதில்லை என்பது பற்றி எமக்கு ஆழமான மற்றும் கடுமையான கவலை இருந்தது’ என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

‘உண்மையில் இது பிரான்ஸ் அரசுக்கு ஏமாற்றத்தை தரும் என்பதை என்னால் நிச்சமாக புரிந்துகொள்ள முடிகிறது. ஆனால் வேறு எந்த இறைமை கொண்ட நாடு போன்றும் எமது இறையாண்மை கொண்ட தேசிய பாதுகாப்பு நலனை கருத்தில் கொண்டு முடிவு எடுக்க வேண்டியது அவசியமாகும்’ என்று அவுஸ்திரேலிய பிரதமர் குறிப்பிட்டார்.

ஆக்கஸ் உடன்படிக்கையின்படி அவுஸ்திரேலியா அணுசக்தி நீர்மூழ்கி கப்பல் உருவாக்குவதற்கான தொழில்நுட்பத்தை அமெரிக்கா வழங்கவுள்ளது. தென் சீன கடலில் சீனாவின் செல்வாக்கை எதிர்கொள்ளவே இந்த உடன்படிக்கை கைச்சாத்திடப்பட்டிருப்பதாக நம்பப்படுகிறது. கடந்த வாரம் இந்த உடன்படிக்கை பொதுவெளியில் அறிவிக்கப்படுவதற்கு சில மணி நேரங்களுக்கு முன்னரே பிரான்ஸுக்கு அது பற்றி கூறப்பட்டுள்ளது.

கூட்டணி நாடுகளுக்கு இடையே மோசமான பிரச்சினை ஒன்று வளர்ந்து வருகிறது என்று பிரான்ஸ் வெளியுறவு அமைச்சர் லே ட்ரியன், ‘பிரான்ஸ்2’ தொலைக்காட்சிக்கு கடந்த சனிக்கிழமை அளித்த பேட்டியில் குறிப்பிட்டார்.

‘அமெரிக்க மற்றும் பிரான்ஸ் இடையிலான வரலாற்று உறவில் முதல்முறையாக, தீவிர அரசியல் செயற்பாடு ஒன்று பற்றிய ஆலோசனைக்காக எமது தூதுவரை நாம் திரும்ப அழைத்திருக்கிறோம். இது எமது நாடுகளுக்கு இடையே தற்போதுள்ள பிரச்சினையின் தீவிரத்தை காண்பிக்கிறது’ என்று அவர் குறிப்பிட்டார். நிலைமையை மீளாய்வு செய்வதற்காக தூதுவர் திரும்ப அழைக்கப்பட்டதாக அவர் குறிப்பிட்டார். ஆனால் பிரிட்டனுக்கான தமது தூதரை திரும்ப அழைப்பதற்கு ‘தேவையில்லை’ என்று லே ட்ரியன் கூறியுள்ளார். ‘ஏனெனில் அது தொடர்ச்சியான சந்தர்ப்பவாத நாடு’ என்று அவர் குற்றம்சாட்டினார்.

‘இந்த முழு விடயத்திலும் பிரிட்டன் மூன்றாவது சக்கரம் போன்றது’ என்று அவர் கூறினார்.

ஆனால் இந்த உடன்பாடு பிரிட்டனின் நலன்களைப் பாதுகாப்பதற்காகவே ஏற்படுத்தப்பட்டிருப்பதாக பிரிட்டனின் புதிய வெளியுறவு அமைச்சர் லிஸ் ட்ரஸ், ‘தி சண்டே டெலிகிராப்’ இதழின் கட்டுரையில் தெரிவித்துள்ளார். தனது நலன்களைப் பாதுகாப்பதில் பிரிட்டன் உறுதியாக இருப்பதையே இது காட்டுகிறது என்று அந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

உளவுத் தகவல்களைப் பகிர்ந்து கொள்வது, குவாண்டம் தொழில்நுட்பம், க்ரூஸ் ரக ஏவுகணைகளை வழங்குவது என பல்வேறு அம்சங்கள் இந்த ஆக்கஸ் உடன்பாட்டில் கூறப்பட்டிருக்கின்றன.

ஆனால் அவற்றுக்கெல்லாம் மேலாக நீர்மூழ்கிக் கப்பல்கள்தான் முக்கியமானவை. அவை தெற்கு அவுஸ்திரேலியாவில் அடிலெய்டில் கட்டப்பட உள்ளன. அவற்றைக் கட்டுவதற்கான தொழில்நுட்பம் மற்றும் ஆலோசனையை அமெரிக்காவும் பிரிட்டனும் வழங்கும்.

இதன்மூலம் கடந்த 50 ஆண்டுகளில் முதன் முறையாக தனது நீர்மூழ்கித் தொழில்நுட்பத்தை பிற நாடுகளுடன் அமெரிக்கா பகிர்ந்து கொள்ளப் போகிறது. இதற்கு முன் பிரிட்டனுக்கு மட்டுமே அந்தத் தொழில்நுட்பம் வழங்கப்பட்டிருந்தது. மறுபுறம் அணுசக்தி நீர்மூழ்கிக் கப்பலை வைத்திருக்கும் ஏழாவது நாடாக அவுஸ்திரேலியா மாறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Mon, 09/20/2021 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை