அமைதி மற்றும் அபிவிருத்தி இலக்குகளுக்காக இலங்கையின் நடவடிக்கைகளுக்கு ஐ.நா பூரண ஒத்துழைப்பு வழங்கும்

அமைச்சர் ஜீ.எல். பீரிஸிடம் ஐ.நா வதிவிட பிரதிநிதி தெரிவிப்பு

அமைதி மற்றும் அபிவிருத்தி இலக்குகளை முன்னெடுப்பதற்காக இலங்கை அரசாங்கம் மேற்கொள்ளும் அனைத்து நடவடிக்கைகளுக்கும் ஐக்கிய நாடுகள் அமைப்பு தமது ஒத்துழைப்பு வழங்கும் என ஐக்கிய நாடுகள் சபையின் இலங்கைக்கான வதிவிட பிரதிநிதி ஹெனா சிங்கர் தெரிவித்துள்ளார். 

ஐக்கிய நாடுகள் சபையின் இலங்கைக்கான வதிவிட பிரதிநிதி ஹெனா சிங்கர் நேற்றைய தினம் கொழும்பிலுள்ள வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சில் அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல் பீரிஸை சந்தித்து கலந்துரையாடும் போதே இவ்வாறு தெரிவித்துள்ளார். 

இதன்போது மனித உரிமை தொடர்பில் தேசிய பொறிமுறை மூலம் பெற்றுக்கொள்ளப்பட்ட முன்னேற்றம் தொடர்பில் வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல் பீரிஸ் ஐ.நா வதிவிட பிரதிநிதியிடம் தெளிவுபடுத்தினார். 

அத்துடன் கொரோனா வைரஸ் ஒழிப்பு நடவடிக்கைகளுக்காக இலங்கை அரசாங்கம் மேற்கொண்டுவரும் தொடர்ச்சியான செயற்பாடுகள் மற்றும் அது தொடர்பில் எதிர்கொள்ள நேர்ந்துள்ள சவால்கள் தொடர்பிலும் வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல் பீரிஸ் ஐ.நா வதிவிட பிரதிநிதிக்கு தெளிவுபடுத்தியுள்ளார். 

அதேவேளை, உலக சுகாதார ஸ்தாபனம் மற்றும் யுனிசெப் உள்ளிட்ட ஐக்கிய நாடுகள் சபை நிறுவனங்களின் செயற்பாடுகளையும் ஆசிய அபிவிருத்தி வங்கி மற்றும் உலக வங்கி மூலம் வழங்கப்பட்டு வரும் உதவிகளையும் அவர் பாராட்டியுள்ளார். 

அமைதி, நீதி மற்றும் நிறுவனங்களின் நிலையான அபிவிருத்தி இலக்கு, மனித உரிமைகள் தொடர்பான உள்நாட்டு பொறிமுறை செயற்பாடுகளின் முன்னேற்றம் தொடர்பிலும் ஐக்கிய நாடுகள் சபையின் வதிவிட பிரதிநிதியிடம் அமைச்சர் தெளிவுபடுத்தியுள்ளார்.

அதேவேளை ஐக்கிய நாடுகள் சபையுடனான அடுத்து வரும் ஐந்து வருடங்களுக்கான ஒத்துழைப்பு, இலங்கையின் முன்னுரிமைகளை உள்ளடக்கிய நிலையான அபிவிருத்தி ஒத்துழைப்பு கட்டமைப்பின் கீழ் இலங்கைக்கும் ஐக்கிய நாடுகள் சபைக்கும் இடையேயான செயன்முறை தொடர்பிலும் ஐ.நா வதிவிட பிரதிநிதி வெளிவிவகார அமைச்சருக்கு தெளிவுபடுத்தியுள்ளார்.

அமைதி மற்றும் அபிவிருத்தியின் இலக்கை எட்டுவதற்கான இலங்கையின் அனைத்து செயல்பாடுகளிலும் ஐக்கிய நாடுகள் சபையின் ஒத்துழைப்பை அவர் மீண்டும் வலியுறுத்தியுள்ளார்.(ஸ)

லோரன்ஸ் செல்வநாயகம் 

 
Sat, 09/04/2021 - 12:18


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை