தலிபான்களின் தடையால் பல்கலைகளில் ஆண் - பெண் மாணவர்கள் நடுவில் திரைச்சீலை

தலிபான்களின் தடையால் பல்கலைகளில் ஆண் - பெண் மாணவர்கள் நடுவில் திரைச்சீலை-Universities Separated with Curtain-Afghanistan

ஆப்கானிஸ்தானில் ஆண், பெண் மாணவர்கள் ஒரு வகுப்பறையில் கலந்து கல்வி பெறத் தலிபான்கள் தடை விதித்துள்ளதைத் தொடர்ந்து பல்கலைக்கழக வகுப்பறைகள் ஆண், பெண் மாணவர்களுக்கென திரைச் சீலைகள் கொண்டு பிரிக்கப்பட்டுள்ளன.

இதனை உறுதிப்படுத்தும் வகையில் 'பஜ்வாக் ஆப்கான் நியூஸ்' என்ற ஆப்கானிஸ்தான் செய்தி நிறுவனம் டுவீட்டரில் புகைப்படத்தைப் பகிர்ந்துள்ளது. அந்தப் புகைப்படத்தில் ஆண், பெண் மாணவர்கள் கலப்பது திரைச் சீலை கொண்டு பிரிக்கப்பட்டுள்ளன. ஆனாலும் கல்விக்கூடங்களின் வகுப்பறைகளில் மாணவ மாணவியர் கலப்பதைத் தவிர்க்கவென சுவர் அமைக்கப்படுமென எதிர்பார்க்கப்படுகிறது.

பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் மற்றும் தனியார் கல்வி நிறுவனங்களின் உரிமையாளர்களுக்கும் தலிபான்களுக்கும் இடையில் ஏற்கனவே நடைபெற்ற கூட்டமொன்றில் ஆண், பெண் மாணவர்கள் கலந்து கல்வி கற்பதை தொடர்ந்தும் முன்னெடுக்காது அதனை முடிவுக்கு வர வேண்டும் என்று தலிபான்கள் குறிப்பிட்டுள்ளனர்.

நாட்டிலுள்ள பாடசாலைகளில் ஆண், பெண் மாணவர்களுக்கான தனித்தனி வகுப்பறைகள் உள்ளன. அதேநேரம் ஆண், பெண் மாணவர்கள் கலந்து கல்விகற்கும் அரச தனியார் பல்கலைக்கழகங்களும் இருக்கின்றன என்று ஏ.என்.ஐ. சுட்டிக்காட்டியுள்ளது.

இவ்வாறான நிலையில் தலிபான்களின் இந்நடவடிக்கை குறித்து அதிகாரிகள் கவலை வெளியிட்டுள்ளனர். 'பொது பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்வி நிறுவனங்களில் தனித்தனியாக வகுப்புகளை நிர்வகிக்கலாம். ஆனால் தனியார் கல்வி நிறுவனங்களில் பெண் மாணவியர் குறைவாக இருப்பதால் இது சிரமமான காரியமாக இருக்கும் என்றும் அவர்கள் தெரிவித்திருக்கின்றனர்.

நாட்டின் முக்கிய பல்கலைக்கழகங்களில் வளங்கள் பற்றாக்குறையாக இருப்பதால் பல்வேறு வகுப்புகளை ஏற்பாடு செய்ய முடியாத நிலைமை உள்ளது. அதனால் தலிபான்களின் இந்நடவடிக்கை பெண்கள் உயர் கல்வியை இழக்கும் நிலையை உருவாக்கும் என்று பலர் சுட்டிக்காட்டியுள்ளனர்.

இதேவேளை தலிபான் அரசாங்கத்தில் உயர் கல்வி அமைச்சராகப் பதவி வகிக்கும் பாக்கி ஹக்கானி லோயா ஜிர்கா கூடாரத்தில் உரையாற்றும்போது, 'நாட்டின் அனைத்து கல்வி நடவடிக்கைகளும் ஷரியா சட்டத்தின்படி முன்னெடுக்கப்படும்' என்று கூறியுள்ளார்.

Sun, 09/12/2021 - 15:08


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை