கொவிட் சவாலை வெற்றிகொள்ள இலங்கைக்கு சீனா பலமாக இருக்கும்

சீன சபாநாயகர் இலங்கை சபாநாயகரிடம் உறுதி

இலங்கையில் பொருளாதார சவாலை போன்று கொவிட்19 சவாலையும் வெற்றிகொள்ள சீன அரசாங்கம் முழுப் பலமாக இருக்குமென சீன மக்கள் குடியரசின் தேசிய மக்கள் காங்கிரஸின் நிலைக்குழுவின் தலைவர் (சீன பாராளுமன்ற சபாநாயகர்) லீ சன்ஷூ, சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தனவிடம் உறுதியளித்துள்ளார்.

சீன பாராளுமன்றத்துக்கும் இலங்கை பாராளுமன்றத்துக்குமிடையில் நேற்று முன்தினம் (31) நடைபெற்ற முதலாவது இராஜதந்திர மட்டத்திலான கூட்டத்திலேயே அவர் இதனைத் தெரிவித்தார்.

சீனாவின் மூன்றாவது பிரஜையும், சீன ஜனாதிபதியின் நம்பிக்கைக்கு பாத்திரமானவர் எனக் கருதப்படும் சீன மக்கள் குடியரசின் தேசிய மக்கள் காங்கிரஸின் நிலைக்குழுவின் தலைவர் (சீன பாராளுமன்ற சபாநாயகர்) லீ சன்ஷூ, தேசிய மக்கள் காங்கிரஸின் நிலைக்குழுவின் உபதலைவர் (பிரதி சபாநாயகர்) வூ வெஹ்வா, சீன நிதி அமைச்சர் ஆகியோர் இணையவழி தொழில்நுட்பத்தின் ஊடாக இணைந்துகொண்ட இந்தக் கூட்டம் கொவிட்19 தொற்றுசூழல் ஏற்பட்ட பின்னர் சீன பாராளுமன்றம் நடத்திய முதலாவது இராஜதந்திர மட்டத்திலான கூட்டம் என்பது விசேடமாகும்.

எமது பாராளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தி சபாநாயகருக்கு மேலதிகமாக பிரதி சபாநாயகர் ரஞ்சித் சியம்பலாப்பிட்டிய, பாராளுமன்றத்தின் சபைமுதல்வரும், கல்வி அமைச்சருமான தினேஷ் குணவர்தன, நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஷ, வெளிநாட்டலுவல்கள் அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ், இளைஞர் விவகார, விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்ஷ, பிராந்திய ஒத்துழைப்பு விவகாரங்களுக்கான இராஜாங்க அமைச்சர் தாரக பாலசூரிய, பாராளுமன்ற செயலாளர் நாயகம் தம்மிக தசநாயக்க மற்றும் பேராசிரியர் ரொஹான் குணரத்ன ஆகியோர் இக்கூட்டத்தில் கலந்துகொண்டனர்.

Thu, 09/02/2021 - 11:28


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை