அரச செலவினங்களை மட்டுப்படுத்த தீர்மானம்

நிதியமைச்சர் பசில் அமைச்சரவைக்கு அறிவுறுத்து

அரசாங்கம் முகம் கொடுத்துள்ள பாரிய நிதி நெருக்கடியை எதிர்கொள்ளும் வகையில் அரச செலவினங்களை கடுமையாக மட்டுப்படுத்துவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது. தற்போதைய கொரோனா வைரஸ் சூழ்நிலையில் நாட்டின் பொருளாதாரம் பாரிய நெருக்கடியைச் சந்தித்துள்ளதாகவும் அத்துடன் அரசாங்கம் எதிர்பார்த்த வருமானம் பெருமளவில் வீழ்ச்சியடைந்துள்ளதுடன் இந்த வருடத்திற்கான மீண்டுவரும் செலவினத்தை நிவர்த்தி செய்வதற்கும் போதிய நிதி கிடையாதென்றும் அமைச்சர் பசில் ராஜபக்ஷ அமைச்சரவைக்கு அறிவித்துள்ளார்.

இந்த வருடத்திற்கான குறைநிரப்பு செலவு 2,69,400 கோடி ரூபா என மதிப்பீடு செய்யப்பட்டிருந்தாலும் தடுப்பூசி செயற் திட்டம், சுகாதாரத் துறைக்கான செலவுகள், சுகாதாரத்துறையில் விரிவாக்கம் செய்ய வேண்டிய செயற்பாடுகள், நிவாரணங்களை வழங்குதல் உள்ளிட்ட நடவடிக்கைகள் காரணமாக குறிப்பிட்ட செலவினம் மேலும் அதிகரித்துள்ளதாகவும் அமைச்சர் பசில் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

இத்தகைய சூழ்நிலையில் அரசாங்கம் நிதி ஒதுக்கீட்டை மேற்கொண்டு இதுவரை ஆரம்பிக்கப்படாத திட்டங்கள், கொள்வனவுகள், கட்டட நிர்மாணங்கள், கட்டடங்களின் புனரமைப்பு போன்ற நடவடிக்கைகளை நிறுத்துமாறும் நிதியமைச்சர் அனைத்து அமைச்சுக்களின் செயலாளர்களுக்கும் அறிவுறுத்தியுள்ளார்.

புதிய ஆட்சேர்ப்பு தொடர்பில் ஊழியர்களை இணைத்துக்கொள்வதற்காக ஆரம்ப நடவடிக்கைகளை மேற்கொண்டு இதுவரை நியமனக் கடிதம் வழங்கப்படாத பதவிகளுக்கான நியமனங்களை இடை நிறுத்துவதற்கான தீர்மானத்தையும் அரசாங்க மேற்கொண்டுள்ளது.

நலன்புரி நடவடிக்கைகள் தொடர்பில் இனங்காணப்பட்டுள்ள பயனாளிகளின் பட்டியல்களை மீளாய்வுக்குட்படுத்தி குறைந்த வருமானம் பெறுவோருக்கு மாத்திரம் நிவாரணங்களை வழங்குவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் அமைச்சுக்களின் செயலாளர்கள் மற்றும் திணைக்களங்களின் தலைவர்கள் ஆகியோரின் அனுமதிக்கிணங்க வழங்கப்பட்டு வரும் சம்பளம் அல்லாத கொடுப்பனவுகள் மற்றும் பட்டியல்களை செலுத்துதல் தொடர்பான விடயங்கள் மீளாய்வுக்கு உட்படுத்தப்பட்டு நிரந்தரமான அதிகாரிகளுக்கு மட்டும் அதனை வழங்குவதற்கு நிதியமைச்சு பரிந்துரை செய்துள்ளது. (ஸ)

லோரன்ஸ் செல்வநாயகம்

Wed, 09/01/2021 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை