ஆப்கானில் எதிர்ப்பாளர்களின் கடைசி மாகாணமும் தலிபான்களிடம் வீழ்ந்தது

ஆப்கானிஸ்தானில் எதிர்ப்பாளர்கள் கட்டுப்பாட்டில் இருந்த கடைசி மாகாணமான பஞ்ஷிர் பள்ளத்தாக்கை முழுமையாக கைப்பற்றியதாக தலிபான்கள் அறிவித்துள்ளனர். இதன்படி தலைநகர் காபுலை கைப்பற்றி மூன்று வாரங்களில் முழு நாட்டையும் தலிபான்கள் தமது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்துள்ளனர்.

‘இந்த வெற்றியுடன் எமது நாட்டை போர் புதைகுழியில் இருந்து முழுமையாக விடுவித்துள்ளோம்’ என்று தலிபான் பேச்சாளர் சபியுல்லா முஜாஹித் நேற்று தெரிவித்தார்.

எனினும் பஞ்ஷிர் பள்ளத்தாக்கில் தொடர்ந்து போராட்டத்தை முன்னெடுப்பதாக குறிப்பிட்டிருக்கும் தலிபான் எதிர்ப்பு தேசிய எதிர்ப்பு முன்னணி, தாம் மூலோபாயமிக்க நிலைகளில் இருப்பதாகவும் தலிபான்களுக்கு எதிரான போராட்டம் தொடரும் என்றும் தெரிவித்துள்ளது.

காபுல் தலிபான்களிடம் வீழ்ந்த பின்னர் எதிர்ப்புப் போராட்டத்தை இணைந்து ஆரம்பித்த ஆப்கான் முன்னாள் துணை ஜனாதிபதி அம்ருல்லா சலே மற்றும் கிளர்ச்சித் தலைவர் அஹமது மசூத் இருவரும் தற்போது எங்கே உள்ளனர் என்று உறுதி செய்யப்படவில்லை.

இதற்கிடையே, பஞ்ஷிர் மாகாண ஆளுநர் மாளிகை வளாகத்தின் நுழைவு வாயிலில் தலிபான் இருப்பதாகக் காட்டும் படங்கள் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகின்றன. அவை எப்போது எடுக்கப்பட்டன என்பது உறுதி செய்யப்படவில்லை.

கரடு முரடான நில அமைப்பைக் கொண்ட சுமார் 2 இலட்சம் பேர் வரை வாழும் பஞ்ஷீர் பள்ளத்தாக்கு மாகாணம் கடந்த பல ஆண்டுகளாக தலிபான்களுக்கு எதிராக போராடி வருகிறது. ரஷ்யா, தலிபான் என எவருக்கும் இம்மாகாணம் அடிபணிந்ததில்லை.

இந்த மாகாணப் படையில் முன்னாள் ஆப்கன் அரசுப் படை வீரர்கள், உள்ளூர் ஆயுதமேந்திய வீரர்களும் இருக்கின்றனர். இப்படையை அஹ்மத் மசூத் தலைமை தாங்கி வழிநடத்துகிறார். முன்னதாக, தலிபான்களுக்கு எதிராகப் போராடிவரும் தேசிய எதிர்ப்பு முன்னணியின் தலைவர் அஹமத் மசூத், தாங்கள் சமாதானப் பேச்சுவார்த்தைக்குத் தயார் என்று கடந்த ஞாயிற்றுக்கிழமை அறிவித்திருந்தார்.

மதத் தலைவர்கள் முன்வைத்த யோசனையின் அடிப்படையில், தாங்கள் பேச்சுவார்த்தைக்குத் தயாராக இருப்பதாகவும், தாக்குதலை தலிபான்கள் நிறுத்த வேண்டும் என்றும் கூறினார். ஆனால், அதற்கு தாலிபன்களிடமிருந்து உடனடியாக எந்த பதிலும் வரவில்லை.

இதற்கிடையில் ஐக்கிய நாடுகள் சபையின் மனிதாபிமானப் பணிகள் துறையின் தலைவர் மார்டின் க்ரிபித் காபுல் நகரத்தில் தலிபான் தலைவர்களைச் சந்தித்து, அனைத்து மக்களையும் குறிப்பாக பெண்கள், பெண் குழந்தைகள், சிறுபான்மையினரை பாதுகாக்குமாறு வலியுறுத்தினார்.

தலிபான் இயக்கத்தை நிறுவியர்களில் ஒருவர் மற்றும் ஆப்கானிஸ்தானின் ஆட்சித் தலைவராக பொறுப்பேற்க உள்ள முல்லா அப்துல் கனி பராதர் உடன் மார்டின் புகைப்படம் எடுத்துக் கொண்டதும் இங்கு குறிப்பிடத்தக்கது. ஆப்கானிஸ்தானின் மனிதாபிமான உதவிகள் தேவையான மக்களுக்கு கிடைக்கவும், மனிதாபிமான உதவிகளைச் செய்யும் ஆண் மற்றும் பெண் சேவகர்கள் அனைவரும் சுதந்திரமாக நடமாட அனுமதிக்கப்படுவார்கள் என தலிபான் தலைவர்கள் உறுதியளித்துள்ளதாக ஐக்கிய நாடுகள் சபையின் செய்தித் தொடர்பாளர் ஒருவர் கூறினார். ஐக்கிய நாடுகள் சபையின் கணக்குப்படி, ஆப்கனில் சுமார் 1.8 கோடி பேருக்கு மனிதாபிமான உதவிகள் தேவை.

Tue, 09/07/2021 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை