தனிமைப்படுத்தல் ஊரடங்கு காலத்தில் அத்தியாவசிய சேவைகளை தொடருமாறு நிறுவனத் தலைவர்களுக்கு ஆலோசனை

பிள்ளைகளுக்கான தடுப்பூசி ஏற்றல் வேலைத்திட்டம் தொடர்பிலும் ஜனாதிபதி விசேட கவனம்

நாடு முழுவதும் தற்போது அமுலில் உள்ள தனிமைப்படுத்தல் ஊரடங்குச் சட்டத்ததை, ஒக்டோபர் மாதம் 01ஆம் திகதி அதிகாலை 4.00 மணி வரை நீடிப்பதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளது. இக்காலப்பகுதியில் அத்தியாவசியச் சேவைகளை வழங்கும் நிறுவனங்களைத்தொடர்ந்து நடத்துமாறு, நிறுவனத் தலைவர்களுக்கு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது.

தனிமைப்படுத்தல் ஊரடங்கை நீடிப்பது தொடர்பாக நேற்று ஜனாதிபதி தலைமையில் நடைபெற்ற கூட்டத்தின் போது, மோட்டார் போக்குவரத்துத் திணைக்களம், காணிப் பதிவு அலுவலகம் போன்ற அத்தியாவசியச் சேவைகளைப் பொதுமக்களுக்கு வழங்கும் நிறுவனங்களின் பணிகளை தொடர்ந்து முன்னெடுக்க வேண்டியதன் அவசியத்தை ஜனாதிபதி எடுத்துரைத்தார். இது தொடர்பில் அந்நிறுவனங்களின் தலைவர்கள், உரிய தீர்மானங்களை மேற்கொள்ள வேண்டுமென்றும் வலியுறுத்தினார்.

பொருளாதார வழிகள் என்பன எக்காரணங்கொண்டும் பாதிக்காத வகையில், அத்தியாவசியச் சேவைகளை முன்னர் போன்று தொடந்து முன்னெடுக்குமாறு ஆலோசனை வழங்கிய ஜனாதிபதி, அனைத்துப் பொருளாதார மத்திய நிலையங்களையும் தொடர்ந்து திறந்துவைக்க நடவடிக்கை எடுக்குமாறும் அறிவுறுத்தினார்.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலைமையில், நேற்று (17) முற்பகல் வீடியோ தொழில்நுட்பத்தினூடாக நடைபெற்ற கொவிட்19 ஒழிப்புச் செயலணியின் விசேட கூட்டத்தின் போதே, இந்தத் தீர்மானம் எட்டப்பட்டுள்ளது.

நிலவும் சவால்மிக்க நிலைமைக்கு மத்தியிலும், ஆண்டின் முதலாவது மற்றும் இரண்டாவது காலாண்டுகளில், நாட்டின் பொருளாதார அபிவிருத்தியின் வேகத்தை உயர்ந்த பட்சத்தில் பேண முடிந்துள்ளதென இதன்போது கூறிய நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஷ, அதற்காக அர்ப்பணிப்புடன் பணியாற்றிய சுகாதார, பாதுகாப்பு உள்ளிட்ட அனைத்துத் துறையினருக்கும் நன்றி தெரிவித்தார்.

இதன்போது, பிள்ளைகளுக்கான தடுப்பூசி ஏற்றல் வேலைத்திட்டம் தொடர்பில் ஜனாதிபதியினால் கேள்வி எழுப்பிய போது பதிலளித்து உரையாற்றிய சுகாதாரச் சேவைகள் பணிப்பாளர் நாயகம் விசேட வைத்திய நிபுணர் அசேல குணவர்தன,

“நாள்பட்ட நோய்களால் பீடிக்கப்பட்டுள்ள 12 முதல் 19 வயதுக்கிடைப்பட்ட சிறுவர்களுக்கு, முன்னுரிமை அடிப்படையில் தடுப்பூசி ஏற்றுமாறு, விசேட சுகாதார நிபுணர்கள் குழு பரிந்துரை செய்துள்ளது” என்றார். அத்துடன், “சிகிச்சையக (கிளினிக்) விசேட வைத்திய நிபுணர்களின் கண்காணிப்பின் கீழ், பெற்றோர்களின் அனுமதியுடன், அந்தச் சிகிச்சையகங்களுக்குள் வைத்து மாத்திரம் மேற்படி சிறுவர்களுக்கான தடுப்பூசியை ஏற்றத் திட்டமிடப்பட்டுள்ளது” என்று, சுகாதாரப் பணிப்பாளர் நாயகம் தெரிவித்தார்.

12 – 15 வயதுக்கிடைப்பட்ட ஆரோக்கியமான சிறுவர்களுக்குரிய தடுப்பூசி ஏற்றல் தொடர்பிலும், விசேட வைத்திய குழுவினரிடம், ஜனாதிபதியால் கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு பதிலளித்த அந்தக் குழு, உலகின் ஏனைய நாடுகளில்கூட, அதற்கான நடவடிக்கைகள் இதுவரையில் முன்னெடுக்கப்படவில்லை என்றும் இருப்பினும், 15 – 19 வயதுக்கிடைப்பட்ட அனைத்துச் சிறுவர்களுக்குமான தடுப்பூசி ஏற்றலுக்குரிய பரிந்துரை கிடைக்கப்பெற்றுள்ளது என்றும் குறிப்பிட்டது.

இதன்படி, நாட்டிலுள்ள 15 – 19 வயதுக்கு இடைப்பட்ட அனைத்துச் சிறுவர்களுக்குமான தடுப்பூசி விசேட வைத்திய குழுவின் பரிந்துரைக்கமைய, அனைத்துச் சிறுவர்களுக்கும், ஃபைஸர் தடுப்பூசியை மாத்திரம் ஏற்றுமாறும், ஜனாதிபதி ஆலோசனை வழங்கினார்.

தெரிவு செய்யப்பட்ட தடுப்பூசிகளை மாத்திரமே இளைஞர் – யுவதிகள் எதிர்பார்க்கும் நிலைமை தோன்றியுள்ளது என்றும் அவர்களுக்கென விசேட தடுப்பூசியொன்று அறிமுகப்படுத்தவில்லையென்றும், நாட்டு மக்களுக்கு ஏற்றப்படும் தடுப்பூசிகள் அனைத்தும் தரம் வாய்ந்தவை என்றும் எடுத்துரைத்த விசேட வைத்திய நிபுணர் பிரசன்ன குணசேன மற்றும் பேராசிரியர் நீலிகா மலவிகே ஆகியோர், அதனால், விசேட தடுப்பூசியொன்று கிடைக்கும் வரை காத்திருக்காது, அனைவரும் தடுப்பூசி ஏற்றிக்கொள்ள முன்வர வேண்டுமென்றும் வலியுறுத்தினர்.

சிக்கல் நிலையுடன்கூடிய கொவிட்19 நோயாளிகளுக்கு ஆயுர்வேத சிகிச்சையளிப்பதன் முக்கியத்துவம் பற்றியும் இதன்போது கலந்துரையாடப்பட்டதுடன், அதற்காக, கிராமிய ஆயுர்வேத வைத்தியசாலைகளில், கொரோனா சிகிச்சை நிலையங்களை உருவாக்குவது தொடர்பிலும் அவதானம் செலுத்தப்பட்டது.

200க்கும் குறைவான மாணவர் கொள்ளளவைக் கொண்டுள்ள கிராமிய பாடசாலைகளைத் திறப்பது தொடர்பிலும், கூட்டத்தின் போது விசேட அவதானம் செலுத்தப்பட்டது. இது விடயத்தில், மாகாண சுகாதாரப் பணிப்பாளர்கள் அனைவரும், கல்வி அமைச்சுடன் இணைந்துப் பணியாற்ற வேண்டியதன் அவசியத்தையும், ஜனாதிபதி எடுத்துரைத்தார். சுகாதார அமைச்சு மற்றும் கல்வி அமைச்சு ஆகியன இணைந்து, பெற்றோர்கள் மற்றும் பிள்ளைகளுக்கான சுகாதார வழிகாட்டுதல்கள் பற்றிய தெளிவுபடுத்தல்களை வழங்க வேண்டுமென்றும், இதன்போது எடுத்துரைக்கப்பட்டது.

தடுப்பூசி ஏற்றிக்கொள்ளல் தொடர்பில் பொதுமக்களை ஊக்குவிக்கும் முழுப் பொறுப்பும், பொதுச் சுகாதாரப் பரிசோதகர்களுக்கு உள்ளதென்று, பொதுச் சுகாதாரப் பரிசோதகர்கள் சங்கத்தின் தலைவர் உபுல் ரோஹனவிடம், ஜனாதிபதி எடுத்துரைத்தார்.

Sat, 09/18/2021 - 08:36


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை