மலையக மக்களுக்கு பாதகமான பல விடயங்கள் அரங்கேறின

- இ.தொ.கா நிதிச்செயலாளர் ராமேஷ்வரன் MP

நல்லாட்சி அரசாங்கத்தின் போதே மலையகத்தில் 52 ஆயிரம் பேருக்கு குடும்பக் கட்டுப்பாடு செய்யப்பட்டுள்ளது. எமது மக்களுக்கு பாதகம் ஏற்படுத்தக்கூடிய பல விடயங்கள் அந்த ஆட்சியில் செய்யப்பட்டுள்ளது என இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் நிதிச்செயலாளரும், பாராளுமன்ற உறுப்பினருமான மருதபாண்டி ராமேஷ்வரன் தெரிவித்தார்.

கொட்டகலை சீ.எல்.எப் கேட்போர் கூடத்தில் நேற்று (13) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து வெளியிடுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.

இதன்போது முன்னாள் மத்திய மாகாண சபை உறுப்பினர்களான ஏ.பி.சக்திவேல், கணபதி கனகராஜ் ஆகியோர் கலந்து கொண்டிருந்தனர். இது தொடர்பில் அவர் மேலும் கூறுகையில்,

நல்லாட்சியின்போது மலையகத்தில் 52 ஆயிரம் பேருக்கு குடும்பக் கட்டுப்பாடு செய்யப்பட்டுள்ளதாக செய்தி வெளியிடப்பட்டுள்ளது. அந்த அரசில் மலையக அமைச்சர்களும் இருந்தனர். அப்போது ஏன் இது பற்றி கேள்வி எழுப்படவில்லை. இந்த விடயம் மட்டுமல்ல மலையக மக்களுக்கு பாதகம் ஏற்படக்கூடிய பல விடயங்கள் நல்லாட்சியின்போது செய்யப்பட்டுள்ளன. காணிகள் பறிபோயுள்ளன.அதேநிலை இன்று ஏற்பட்டிருந்தால் இ.தொ.கா மௌனம், நடவடிக்கை எடுக்கவில்லை என விமர்சனங்கள் முன்வைக்கப்படும்.

அதேவேளை, மலையக மக்கள்மீது அதிகபொறுப்பும், பற்றும் காங்கிரசுக்கு உள்ளது. மக்களுக்கு பிரச்சினை என்றால் களத்தில் இறங்கி செயற்படுவோம். உதவி செய்துவிட்டு அதனை ஊடகங்களில் பிரசாரம் செய்யமாட்டோம். அதேபோல விமர்சனங்களை முன்வைத்து அன்று முதல் இன்றுவரை நாம் அரசியல் நடத்தியதும் கிடையாது. ஆனால் சிலருக்கு காங்கிரஸை விமர்சிக்காவிட்டால் அரசியல் நடத்தமுடியாது.

கடந்த ஒரு வருடத்துக்குள் 700 வீடுகள் கட்டப்பட்டுள்ளன. கடந்த ஆட்சியில் உட்கட்டமைப்பு வசதிகள் செய்துகொடுக்கப்படாத வீடுகளுக்கு அவற்றை செய்துகொடுப்பதற்கு நடவடிக்கை எடுத்தோம்.

காணி பறிக்கப்படுவதாக குற்றச்சாட்டு முன்வைக்கின்றனர். ஜீவன் மௌனம் எனவும் கூறுகின்றனர். அவர் வெளிநாடு சென்றுள்ளார். நாடு திரும்பியதும் பதில் வழங்குவார். பால் பண்ணை அமைக்கும் விடயம் பற்றி அமைச்சர்களான மஹிந்தனாந்த, ரமேஷ் பத்திரன ஆகியோரிடம் கலந்துரையாடியுள்ளோம் என தெரிவித்த அவர், தொழில் பேட்டைகள் வரும்போது எமது மக்களுக்கு முன்னுரிமை வழங்கப்படவேண்டும் எனவும் கூறினார்.

Tue, 09/14/2021 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை