ஆப்கானில் இருந்து முதல்முறை வெளிநாட்டினர் வெளியேற்றம்

அமெரிக்கப் படைகள் வெளியேறிய பின்னர் தலிபான்கள் கட்டுப்பாட்டில் உள்ள காபூல் விமான நிலையத்தின் வழியாக முதல் முறையாக வெளிநாட்டுக்கு பயணிகள் அனுப்பப்பட்டுள்ளனர்.

கட்டார் ஏர்வேஸ் விமானம் மூலம் கட்டார் தலைநகர் டோஹாவுக்கு இந்தப் பயணிகள் அழைத்து வரப்பட்டனர்.

இதில் 113 பேர் இருந்ததாக ரோய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் கூறியுள்ளது. இவர்களில் அமெரிக்க மற்றும் பிரிட்டிஷ் குடிமக்கள் அடங்குவார்கள்.

அண்மையில் கட்டாருக்குச் சென்றிருந்த அமெரிக்க வெளியுறவு அமைச்சர் அந்தோனி பிளிங்கென், ஆப்கானிஸ்தானில் இருந்து மக்களை மீட்பதற்கு உதவும்படி கேட்டுக் கொண்டார்.

கனடாவைச் சேர்ந்த 43 பேரும், நெதர்லாந்தைச் சேர்ந்த 13 பேரும் மீட்கப்பட்டிருப்பதாக அந்தந்த நாடுகள் தெரிவித்துள்ளன.

கடந்த ஓகஸ்ட் 15ஆம் திகதி தலிபான்கள் அதிகாரத்தைக் கைப்பற்றிய பின்னர், 1.24 இலட்சம் பேர் அங்கிருந்து விமானங்கள் மூலமாக அழைத்து வரப்பட்டனர். வெளியேறுவதற்கான கெடு ஓகஸ்ட் 31ஆம் திகதி முடிந்த பின்னரும் பலர் அங்கு சிக்கியுள்ளனர்.

காபூல் விமானநிலையத்தில் தற்போதைய நிலவரம் குறித்து செய்தி வெளியிட்ட கட்டார் செய்தி நிறுவனம் ஒன்று, “விமானநிலையத்தில் பெண்கள், குழந்தைகள், முதியோர் என நூற்றுக் கணக்கானோர் உடைமைகளுடன் காத்திருக்கின்றனர். காத்திருக்கும் 200 பேருமே அமெரிக்கர்கள் அல்ல. அமெரிக்கர்கள் 100 பேருக்கும் குறைவாகவே இருக்கின்றனர். மற்றவர்கள் அமெரிக்காவுடன் இணைந்து பணியாற்றியவர்கள், ஆப்கானிஸ்தானைச் சாராதவர்கள்” என்று தெரிவித்துள்ளது.

ஆப்கானிஸ்தானுக்கான கட்டார் நாட்டின் சிறப்பு தூதர் முத்லாக் அல் காத்ஹானி கூறுகையில், “இன்றைய தினம் வரலாற்றுச் சிறப்புமிக்க தினம். கட்டார் தொழில்நுட்பக் குழுவினர் ஆப்கான் குழுவினருடன் இணைந்து விமான நிலையத்தை சீரமைத்து வருகிறது. சர்வதேச விமானங்களை இயக்கும் அளவுக்கு விமான நிலையத்தை திறக்கும் நாள் வெகு தொலைவில் இல்லை.

விமான நிலையத்தில் ரேடார், லாண்டிங் தொழில்நுட்பக் கருவிகள் சீரமைக்கப்பட்டுள்ளன. தொலைதொடர்பு சாதனங்கள் சரியாக இயங்குகின்றன. நிறைய சவால்களின் ஊடே இது நடந்துள்ளது. இன்னும் சில தொழில்நுட்பப் பிரச்சினைகளை சரிசெய்ய வேண்டியுள்ளது” என்றார்.

Sat, 09/11/2021 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை