ஈயங்கலந்த பெற்றோல் பயன்பாடு உலகில் இருந்து முற்றாக ஒழிந்தது

உலகில் எந்த நாடும் தற்போது கார் மற்றும் லொரிகளுக்காக ஈயங்கலந்த பெற்றோலை பயன்படுத்துவதில்லை என்று ஐ.நா சுற்றுச்சூழல் திட்டம் அறிவித்துள்ளது.

இந்த நச்சு எரிபொருள் கிட்டத்தட்ட ஒரு நூற்றாண்டு காலமாக வான், மண் மற்றும் நீரை மாசுபடுத்தியுள்ளது.

இது இதய நோய்கள், புற்றுநோய் மற்றும் பக்கவாதம் போன்ற பாதிப்புகளை ஏற்படுத்தக் கூடியது என்பதோடு குழந்தைகளின் மூளைவளர்ச்சி தொடர்பான பிரச்சினைகளுக்கும் இது காரணமாகிறது.

அதிக வருவாய் கொண்ட நாடுகள் 1980 களிலேயே இந்த பெற்றோலின் பயன்பாட்டை நிறுத்தியதோடு கடந்த ஜூலை வரை கடைசி நாடாக அல்ஜீரியா இதனை பயன்படுத்தி வந்தது.

ஈயங்கலந்த பெற்றோலை ஒழித்திருப்பது ‘சர்வதேசத்தின் வெற்றிக்கதை’ என்று ஐ.நா செயலாளர் நாயகம் அன்டோனியோ குட்டரஸ் தெரிவித்துள்ளார்.

‘ஈயங்கலந்த பெற்றோலின் பயன்பாட்டை முடிவுக்குக் கொண்டுவந்திருப்பது இதய நோய், பக்கவாதம் மற்றும் புற்றுநோயால் நிகழும் ஒரு மில்லியனுக்கும் அதிகமான உயிரிழப்புகளை தடுத்திருப்பதோடு மூளைவளர்ச்சி தொடர்பான பிரச்சினைகளில் இருந்து குழந்தைகளையும் பாதுகாத்துள்ளது’ என்றும் அவர் தெரிவித்தார்.

எஞ்சின் செயற்பாட்டை மேம்படுத்துவதற்காக 1920களின் ஆரம்பத்திலேயே ஈயங்கலந்த பெற்றோல் பயன்பாட்டுக்கு கொண்டுவரப்பட்டது.

செல்வந்த நாடுகள் இதன் பயன்பாட்டை முதலில் நிறுத்தியபோதும் 2000களில் 86 நாடுகள் தொடர்ந்தும் இந்தப் பெற்றோலை பயன்படுத்தி வந்தன.

கடைசியாக ஈரான், யெமன் மற்றும் அல்ஜீரியா போன்ற ஒருசில நாடுகளே இந்த பெற்றோலை பயன்படுத்தி வந்தமை குறிப்பிடத்தக்கது.

Wed, 09/01/2021 - 12:06


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை