முறைப்பாடு கிடைத்தால் சட்ட நடவடிக்கைக்கு தயார்

முறைப்பாடு இன்றி விசாரணையை முன்னெடுக்க முடியாது

நேற்று நண்பகல் வரை  எந்த முறைப்பாடும் கிடைக்கவில்லை

பொலிஸ்  தலைமையகம் அறிவிப்பு

 

சிறைச்சாலைகள் முகாமைத்துவம் மற்றும் சிறைக் கைதிகள் புனர்வாழ்வு நடவடிக்கைகளுக்குப் பொறுப்பான முன்னாள் இராஜாங்க அமைச்சரான லொஹான் ரத்வத்த தொடர்பில் பொலிஸாருக்கு எந்த முறைப்பாடும் கிடைக்கவில்லை என பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.

கடந்த 12 ஆம் திகதி வெலிக்கடை மற்றும் அநுராதபுரம் சிறைச்சாலைகளில் இடம்பெற்றதாக கூறப்படும் சம்பவம் தொடர்பில் அந்தச் சிறைச்சாலைகள் அமைந்துள்ள பொலிஸ் பிரிவுகளில் உள்ள பொலிஸ் நிலையங்களுக்கு இராஜாங்க அமைச்சருக்கு எதிராக எந்த முறைப்பாடுகளும் நேற்று (15) நண்பகல் 12.00 மணி வரை பதிவாகியிருக்கவில்லை என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்துவ தெரிவித்தார்.

இந்நிலையில் சிறைச்சாலையில் இடம்பெற்றதாக கூறப்படும் சம்பவம் தொடர்பில், முறைப்பாடுகள் இன்றி விசாரணைகளை முன்னெடுப்பது சிரமம் எனவும், முறைப்பாடுகள் ஏதும் கிடைக்கப்பெறின் அம்முறைப்பாட்டுக்கு அமைய தேவையான சட்ட நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.

செப்டம்பர் 12 ஆம் திகதி மாலை அனுராதபுரம் சிறைச்சாலைக்குச் சென்ற சிறைச்சாலைகள் முகாமைத்துவ இராஜாங்க அமைச்சர் லொகான் ரத்வத்த, தமிழ் அரசியல் கைதிகளை வரவழைத்து, அவர்களில் இருவரை அவருக்கு முன்னால் மண்டியிட வைத்து, துப்பாக்கி முனையில் அச்சுறுத்தியதாக கூறப்படுகிறது.

வெலிக்கடை மற்றும் அநுராதபுரம் ஆகிய சிறைச்சாலைகளில் தன்னால் மேற்கொள்ளப்பட்ட சம்பவங்களுக்கான பொறுப்பை ஏற்றுக்கொண்டு, சிறைச்சாலைகள் முகாமைத்துவம் மற்றும் சிறைக்கைதிகள் புனர்வாழ்வு விவகார இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்த, தனது அமைச்சுப் பதவியை நேற்று இராஜினாமா செய்தார்.

 

லோரன்ஸ் செல்வநாயகம்

Thu, 09/16/2021 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை