சபாநாயகர் கூறிய பின்பே சிறைக்கதவு திறக்கப்பட்டது

அரசியல் கைதிகளை சந்திக்கச்சென்ற மனோ MP

அநுராதபுரம் சிறைச்சாலைக்குள் சென்று தெரிந்து கொண்ட தகவல்களுக்கமைய அண்மையில் லொஹான் ரத்வத்தையின் செயற்பாடுகள் குறித்து ஊடகங்களில் வெளியான செய்திகள் அனைத்தும் உண்மையானவை என்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது என தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன் தெரிவித்தார்.

இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்த மதுபோதையில் துப்பாக்கியுடன் வந்ததாகவும் , போதையில் இருந்தமையால் துப்பாக்கியை எடுத்து அச்சுறுத்தியதாகவும் கைதியொருவர் கூறியதாக அவர் தெரிவித்தார். நிலைமையை ஆராய்வதற்காக பாராளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன், ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் காவிந்த ஜயவர்தன மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் ரோஹண பண்டார உள்ளிட்டோர் அநுராதபுரம் சிறைச்சாலைக்கு சென்றதாக தெரிவிக்கப்பட்டது.இது குறித்து ஊடகங்களுக்கு தெரிவித்த மனோ எம்.பி மேலும் தெரிவித்ததாவது,

நாம் சிறைச்சாலைக்கு வருகை தரவுள்ளதாக ஏற்கனவே உரிய அதிகாரிகளுக்கு அறிவித்திருந்த போதிலும் நேற்று எமக்கு உள்ளே செல்ல அனுமதிக்கப்படவில்லை. அனுமதி மறுக்கப்பட்டதையடுத்து சபாநாயகரை தொடர்பு கொண்டதன் பின்னரே எமக்கு உள் செல்ல அனுமதி வழங்கப்பட்டது. பாராளுமன்ற உறுப்பினர்களான எமக்கே இந்த நிலைமை என்றால் சாதாரண பிரஜைகளின் நிலைமை என்னாவாயிருக்கும் என்பது இதன் மூலம் தெளிவாகிறது.

நாம் உள்ளே சென்று தெரிந்து கொண்ட தகவல்களுக்கமைய அண்மையில் லொஹான் ரத்வத்தயின் செயற்பாடுகள் குறித்து ஊடகங்களில் வெளியான செய்திகள் அனைத்தும் உண்மையானவை என்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்த மதுபோதையில் துப்பாக்கியுடன் வந்ததாகவும் , போதையில் இருந்தமையால் துப்பாக்கியை எடுத்து அச்சுறுத்தியதாகவும் கைதியொருவர் கூறினார் என மனோ கணேசன் எம்பி தெரிவித்தார் .

Mon, 09/20/2021 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை