சிவில் செயற்பாட்டாளர்களுடன் ஒத்துழைப்பது சிறந்த செயற்பாடு

ஐ.நா மனித  உரிமைப் பேரவை ஆணையாளர்  தெரிவிப்பு

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷ, சிவில் சமூக செயற்பாட்டாளர்களுடன் ஒத்துழைப்புடன் செயற்பட்டு வருகின்றமை சிறந்த செயற்பாடாகுமென ஐ.நா மனித உரிமை பேரவையின் ஆணையாளர் மிசேல் பெச்சலே தெரிவித்துள்ளார்.

அத்துடன் பொறுப்புக்கூறல் நடவடிக்கைகளை உரிய வகையில் நடைமுறைப்படுத்தி தேவையான மறுசீரமைப்பை மேற்கொள்வதாக இலங்கை அரசாங்கம் தெரிவித்திருந்தது. அந்தவகையில் இலங்கை அதனை உரிய முறையில் நடைமுறைப்படுத்துமென எதிர்பார்க்கின்றேன் என்றும் அவர் தெரிவித்தார் .

நேற்றைய தினம் ஐ.நா மனித உரிமை பேரவையின் ஆரம்ப நிகழ்வின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அண்மையில் ஜனாதிபதி சிவில் சமூக செயற்பாட்டாளர்களுடன் மேற்கொண்ட பேச்சுவார்த்தை தொடர்பில் தாம் பயனுள்ளதாக பார்ப்பதாகவும் தெரிவித்துள்ள அவர், சிவில் அவகாசத்தை மேம்படுத்துவது தொடர்பில் அதுபோன்ற பேச்சுவார்த்தைகளை தொடர்ந்தும் எதிர்பார்ப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.

ஐநா மனித உரிமை பேரவையின் 48ஆவது அமர்வு ஜெனிவா நகரில் இலங்கை நேரப்படி நேற்றைய தினம் பிற்பகல் 1.30 மணிக்கு ஆரம்பமாகியதுடன் மனித உரிமை ஆணைக்குழுவின் தலைவி நஸான் சமீம் கான் அமர்வை ஆரம்பித்து வைத்து கருத்துக்களை வெளியிட்டார்.

அதன் போது ஐ,நா மனித உரிமை ஆணையாளர் மிசேல் பெச்சலே, இலங்கை உள்ளிட்ட சில நாடுகளில் மனித உரிமை செயற்பாடுகளின் முன்னேற்றம் தொடர்பான வாய்மூல அறிக்கையை சமர்பித்தார்.

கொரோனா வைரஸ் சூழ்நிலையை கருத்திற் கொண்டு சுகாதார வழிமுறைகளை பின்பற்றி அமர்வின் செயற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டன.

இங்கு மேலும் கருத்து தெரிவித்த ஐ.நா மனித உரிமை பேரவையின் ஆணையாளர்:

அறிக்கையை தயாரிக்கும் செயற்பாடுகளின் போது இலங்கை அரசாங்கம் பெற்றுக்கொடுத்த ஆவணங்கள் தொடர்பில் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

கடந்த ஜூன் மாதத்தில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷ, தனது உரையின் போது ஐக்கிய நாடுகள் அமைப்புடன் நெருக்கமாக செயற்படப் போவதாக தெரிவித்திருந்தார்.

பொறுப்புக்கூறல் நடவடிக்கைகளை உரிய வகையில் நடைமுறைப்படுத்தி தேவையான மறுசீரமைப்பை மேற்கொள்வதாக அரசாங்கம் தெரிவித்திருந்தது. அந்தவகையில் இலங்கை அதனை உரிய முறையில் நடைமுறைப்படுத்துமென எதிர்பார்க்கின்றேன்.

தேசிய விசாரணை ஆணைக்குழுவின் அறிக்கை இந்த வருட இறுதிக்குள் வெளியிடப்படுமென நம்புகின்றேன்.

தற்போது இலங்கையில் நிலவும் சமூக பொருளாதார மற்றும் நிர்வாகம் தொடர்பான சவால்களுக்கு இராணுவ மயப்படுத்தல் மற்றும் பொறுப்புக் கூறல் தொடர்பில் நிலவும் குறைபாடுகளும் காரணமாக உள்ளன.

இந்த நிலையானது அடிப்படை உரிமை, ஜனநாயக நிறுவனங்கள் மற்றும் நிலையான அபிவிருத்திகளுக்கும் அழுத்தம் செலுத்துகின்றன.

உணவுப் பொருட்கள் விலை கட்டுப்பாடு மற்றும் உணவுப் பொருட்களை உரிய வகையில் மக்களுக்கு பெற்றுக் கொடுக்கும் நோக்கில் கடந்த 30 ஆண்டுகளில் அவசரகால சட்டம் பிறப்பிப்பதற்கு தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது எனினும் அதன் சட்ட சரத்துக்கள் மிகவும் விரிவானவை. அதனால் சிவில் பிரிவு செயற்பாடுகளில் கைவைப்பது அதிகரிக்கலாம்.

மனித உரிமை தொடர்பான நீதிமன்ற செயற்பாடுகள் தொடர்பில் எனது அலுவலகம் கவனம் செலுத்தியுள்ளது. 2007 ஆம் ஆண்டு 11 நபர்கள் காணாமற்போயுள்ள சம்பவம் தொடர்பான வழக்கு விசாரணை தொடர்பில் சட்ட மாஅதிபரின் தீர்ப்பு அதில் ஒன்றாகும்.

அதேபோன்று பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ள 16 பேரை விடுதலை செய்வதற்கு கடந்த ஜூன் 16ஆம் தேதி தீர்மானம் மேற்கொள்ளப்பட்டது. அந்த விசாரணைக்கு ஆலோசனை வழங்குவதற்காக சபை ஒன்றும் நியமிக்கப்பட்டது. 46/1 ஆலோசனை தொடர்பில் செயற்படுவதற்காக எனது காரியாலயம் செயற்பாடுகளை ஆரம்பித்துள்ளது.

அது தொடர்பில் இதுவரை சுமார் 1,20,000 சாட்சிகள் சேமித்து வைக்கப்பட்டுள்ளன.

இந்த வருடத்தில் அது தொடர்பில் தகவல்களைப் பெற்றுக்கொள்ள எதிர்பார்த்துள்ளேன்.

இலங்கையில் நடைபெறும் சம்பவங்கள் தொடர்பில் அதிக கவனம் செலுத்துமாறும் மனித உரிமையை தொடர்ந்து முன்னெடுக்கும் போது நம்பிக்கை மிகுந்த முன்னேற்றத்தை பெற்றுக் கொள்ளுமாறும் கேட்டுக் கொள்கின்றேன்" என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

கடந்த மார்ச் மாதத்தில் நடைபெற்ற 46 ஆவது அமர்வின்போது இலங்கையின் நல்லிணக்கம், பொறுப்புக்கூறல் மற்றும் மனித உரிமை மேம்பாடு தொடர்பில் யோசனை நிறைவேற்றப்பட்டுள்ள நிலையில் அதன் பரிந்துரைகளுக்கிணங்க மனித உரிமை ஆணையாளரின் வாய்மூல அறிக்கையின் முன்னேற்றம் தொடர்பில் விடயங்கள் முன்வைக்கப்பட்டுள்ளன.

அந்த அறிக்கை மீதான விவாதம் இன்று 14ஆம் திகதி நடைபெறவுள்ளதுடன் இலங்கை அதற்கு பதிலளிக்கவுள்ளதாக வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது. ஜெனிவா மனித உரிமை பேரவையின் 48ஆவது அமர்வு எதிர்வரும் 08ஆம் திகதி நிறைவு பெறவுள்ளதுடன் இலங்கை உள்ளிட்ட 47 அங்கத்துவ நாடுகள் அமர்வுகளில் பங்கேற்கவுள்ளன. (ஸ)

Tue, 09/14/2021 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை