கப்பல் போக்குவரத்து ஆரம்பிக்க புதுச்சேரி முதலமைச்சருடன் பேச்சு

வியாழேந்திரனும் செந்திலும் ஆலோசனை தெரிவிப்பு

இலங்கை – காரைக்கால் இடையே கப்பல் போக்குவரத்தை ஆரம்பிக்க புதுச்சேரி முதலமைச்சருடன் இலங்கையின் இராஜாங்க அமைச்சர் வியாழேந்திரன், செந்தில் தொண்டமான் ஆகியோர் ஆலோசனை நடத்தியுள்ளனர்.

புதுச்சேரி சட்டப்பேரவைக்கு நேற்று முன்தினம் (15) சென்றிருந்த பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் இணைப்புச் செயலாளர் செந்தில் தொண்டமான் மற்றும் இராஜாங்க அமைச்சர் சதாசிவம் வியாழேந்திரன் ஆகியோர் புதுச்சேரி முதல்வர் ரங்கசாமியை சந்தித்து கலந்துரையாடினர்.

செந்தில் தொண்டமான் மற்றும் வியாழேந்திரன் ஆகியோர் புதுச்சேரி சட்டப்பேரவைக்கு சென்றுள்ளனர். அங்கு நடைபெற்ற இந்த ஆலோசனை கூட்டத்தில் புதுச்சேரி அமைச்சர் சந்திர பிரியங்கா, அரசு செயலாளர் ஆகியோர் உடன் இருந்தனர்.

இதன்போது இலங்கை மற்றும் காரைக்கால் மீனவர்கள் பிரச்சினைக்கு சுமூகத் தீர்வு கண்டு நல்லுறவை வளர்ப்பது தொடர்பாக பேச்சுவார்த்தை நடைபெற்றதாக தெரிவிக்கப்பட்டது.அத்துடன் காரைக்கால் இலங்கை இடையேயான கப்பல் போக்குவரத்து தொடங்குவது தொடர்பாகவும் ஆலோசனை நடத்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அண்மையில் கடல் எல்லைப் பகுதியில் காரைக்கால் மீனவர்களுக்கும் இலங்கை மீனவர்கள் மற்றும் கடற்கொள்ளையர்கள் இடையே தாக்குதல் சம்பவங்கள் நடைபெற்று காயங்களுக்கு உள்ளாகி சிலர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தனர். இந்நிலையிலேயே தற்போது பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது.

 

 

Fri, 09/17/2021 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை