கொவிட் தடுப்பூசி, விழிப்புணர்வு திட்டங்களில் தோட்ட சமூகத்துக்கு முன்னுரிமை

சாதகமான முடிவை வழங்குவதாக WHO செந்தில் தொண்டமானிடம் உறுதி

தடுப்பூசி வேலைத்திட்டத்தில் பெருந்தோட்டப் பகுதி மக்களுக்கு முன்னுரிமையளித்து விசேட திட்டமொன்றை அறிமுகப்படுத்துமாறு பிரதமரின் இணைப்புச் செயலாளர் செந்தில் தொண்டமான் WHO க்கு கோரிக்கை விடுத்துள்ளார்.

இராஜாங்க அமைச்சர் வியாழேந்திரன், இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் உபத் தலைவரும் பெருந்தோட்டப் பிராந்தியங்களுக்கான பிரதமரின் இணைப்புச் செயலாளருமான செந்தில் தொண்டமான், அமைச்சின் செயலாளர் ஹர்ஷ டி சில்வா ஆகியோர், உலக சுகாதார அமைப்பின் இலங்கைக்கான தலைவர் வைத்தியர் அலங்கா சிங் மற்றும் உலக சுகாதார அமைப்பின் வைத்தியர் ஒலிவியா கோராசன் நிவேராஸ் (சுகாதார நிர்வாகி) ஆகியோரை சந்தித்து கிழக்கு மாகாண மக்கள் மற்றும் பெருந்தோட்ட மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் குறித்து கலந்துரையாடினர்.

இக் கலந்துரையாடலிலேயே செந்தில் தொண்டமான் பெருந்தோட்ட மக்கள் தொடர்பில் இந்த கோரிக்கையை விடுத்தார்.

தோட்ட பகுதிகளின் தொடர் குடியிருப்புகளில் தோட்ட மக்கள் நெருங்கி வாழ்வதுடன், 2020ஆம் ஆண்டு நாட்டில் முடக்கங்கள் ஆரம்பிக்கப்பட்ட போதிலும் இவர்கள் விடுமுறை இன்றி தொடர்ந்து பணியாற்றி வருவதுடன் தேசிய அந்நிய செலாவணியை ஈட்டுவதற்கும் பங்களிப்பை வழங்கி வருகின்றனர்.இதன் காரணமாக தடுப்பூசி திட்டத்தில் பெருந்தோட்ட சமூகத்திற்கு முன்னுரிமை வழங்கப்பட வேண்டும் என்றும் செந்தில் தொண்டமான் வேண்டுகோள் விடுத்தார்.

மேற்கூறிய அனைத்து விடயங்களையும் கருத்தில் கொண்டு தடுப்பூசி திட்டங்கள் மற்றும் விழிப்புணர்வு திட்டத்தில் WHO அதன் ஆதரவை தோட்டப் பகுதிகளுக்கு முன்னுரிமை அடிப்படையில் வழங்க வேண்டும் என்ற கோரிக்கைக்கு சாதகமான முடிவை வழங்குவதாக WHO உறுதியளித்தது.

Fri, 09/03/2021 - 13:20


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை