தலிபான் இணை நிறுவுனர் ஆப்கான் புதிய அரசுக்கு தலைவராக வாய்ப்பு

ஆப்கானிஸ்தானின் புதிய அரசுக்கு தலிபான் இணை நிறுவுனரான முல்லா பரதர் தலைமை வகிப்பார் என்று தலிபான் தரப்பை மேற்கோள்காட்டி செய்தி வெளியாகியுள்ளது.

ஆப்கானை கைப்பற்றியுள்ள தலிபான்கள் புதிய அரசை அறிவிக்கவுள்ள நிலையிலேயே இது பற்றிய செய்தி வெளியாகியுள்ளது.

தலிபான் அரசியல் அலுவலகத்தின் தலைவரான பரதர், மரணித்த தலிபான் இணை நிறுவனர் முல்லா ஒமரின் மகன் முல்லா முஹமது யாகூப் மற்றும் ஷெர் முஹமது அப்பாஸ் ஸ்டனக்சாய் ஆகியோர் புதிய அரசின் உயர் பதவிகளை வகிக்கவிருப்பதாக செய்தி வெளியாகியுள்ளது.

‘புதிய அரசின் இறுதிக் கட்ட அறிவிப்பை வெளியிடுவதற்காக அனைத்து முன்னணித் தலைவர்களும் காபூலுக்கு வந்துள்ளனர்’ என்று தலிபான் அதிகாரி ஒருவர் நேற்று கூறியிருந்தார்.

தலிபான்களின் உயர்மட்ட மதத் தலைவரான ஹைபதுல்லா அகுன்சதா, மத விவகாரங்கள் மற்றும் இஸ்லாமிய கட்டமைப்புக்குள் ஆட்சி நடத்தப்படுவது பற்றி அவதானம் செலுத்தவுள்ளார். இது ஈரானின் உயர்மட்ட தலைவருக்கு ஒப்பான பதவியாக இருக்க வாய்ப்பு உள்ளது.

அதேபோன்று தலிபான்களின் அரசு கட்டமைப்பில் மாகாணங்களுக்கு ஆளுநர்களும், மாவட்டங்களுக்கு அந்தந்த மாவட்ட ஆளுநர்களும் தலைவராக இருப்பார்கள்.

இந்த ஆளுநர்கள், பொலிஸ் தலைவர்கள் மற்றும் மாகாண, மாவட்ட கொமாண்டர்களை தலிபான்கள் ஏற்கனவே நியமித்துள்ளனர். அதேநேரம் புதிய நிர்வாக அமைப்புக்கான பெயர், தேசியக்கொடி மற்றும் தேசிய கீதம் ஆகியவை இன்னும் முடிவு செய்யப்படவில்லை.

Sat, 09/04/2021 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை